என் மலர்tooltip icon

    சென்னை

    • பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும்.

    பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதை நூலான 'எனது ஆண்கள்' நூலை தமிழில் மொழி பெயர்த்த பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவிற்கு எனது பாராட்டுகள்.

    கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன்.
    • டி.டி.எஃப். வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன். அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்கள் பதிவிடுவது போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறை தண்டனையையும் டி.டி.எஃப். வாசன் பெற்றுள்ளார்.

    முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பதி மலைக்கு டி.டி.எஃப். வாசன் சென்றிருந்தபோது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார், டி.டி.எஃப். வாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் டி.டி.எஃப். வாசனின் வங்கிக்கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் முத்து, தெரிவித்துள்ளார்.

    மேலும், டி.டி.எஃப். வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
    • இந்த சமூகமும் ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

    * இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள்.

    * அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகிறார்கள்.

    * இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.

    * ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    * இப்படிப்பட்ட சமூகத்தில் தான் அங்குலம் அங்குலமாக போராடி... போராடி... போராடி... இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை.
    • பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் முன்னிலை வகித்தார்.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மருத்துவர் அணி தலைவர் கனிமொழி சோமு எம்.பி., மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பெண்களை படிக்கக்கூடாது என்றும், இந்த உலகத்தில் உன்னால் போட்டிபோட முடியாது என்று சொல்வார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தற்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு நமது தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் காரணம். பெண்கல்வி இருந்தால் சமூகம் மாற்றம் அடையும்.

    நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கள் வீட்டு பிள்ளைகள் யார் இந்தி படிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்தது கிடையாது. நான் டெல்லியில் இருக்கும்போது இந்தி தெரியாததால் எனக்கு இதுவரை எந்த சிரமமும் ஏற்படவில்லை.

    இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி தமிழகம் வருகிறார்கள்.

    அவர்கள் தமிழ் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். தமிழ் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். மும்மொழி கொள்கை படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.

    எந்த தடையும் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.
    • எம்.பி.க்கள் கூட்டம் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்தார்.

    பாராளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.

    இந்த நிலையில், நாளை ( மார்ச் 10-ம் தேதி) பாராளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.

    நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    எம்.பி.க்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?. எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்? யார் யார் பேசு வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.

    சென்னை:

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

    இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
    • ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள்.

    தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க.வினரை விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துவரும் அராஜக சீண்டல்கள், பாலியல் வன்முறைகள், பாதுகாப்பற்ற சூழல் போன்ற குற்றங்களைக் கண்டித்து சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகம் முழுவதும் அடையாள அறவழிப் போராட்டத்தை நடத்தினர் நமது கழக மகளிரணி தோழர்கள்.

    மகளிர் பாதுகாப்பை மதிக்காத ஆட்சியாளர்கள், அரசியலமைப்பு கொடுத்த ஜனநாயக உரிமையையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.

    இதனை, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் விமர்சனக் குரலைச் சகித்துக்கொள்ள முடியாத அரசின் எதேச்சதிகார போக்காகவே கருத வேண்டியுள்ளது.

    அரசின் காவல்துறை பெண்கள் உட்பட தமது குடிமக்களைப் பாதுகாக்க உள்ளதா? அல்லது அதற்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க உள்ளதா? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

    பிரச்சனைகளைப் பேசி யாரும் எதிர்க்குரல் எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசு, அந்த சுறுசுறுப்பை சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் காட்டுவதில்லை.

    பெண்கள் உரிமையைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினால் கைது செய்வேன் என்ற அச்சுறுத்தலை நம் மகளிருக்கு இந்த மகளிர் தின பரிசாக வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

    இத்தகைய ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள். மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட மகளிரணி தோழர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும்.
    • பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் சார்பில் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், நாளை காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதுகுறித்த்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.

    மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
    • வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.

    சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ ரெயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624-வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன, இதன் மூலம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

    இந்த இறுதி யு-கர்டர் குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள SP-04-05 தூண்களுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

    இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது. மேலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3,202 முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements) மற்றும் 2 திறந்த வலை உத்திரங்கள் (Open Web Girders), உட்பட 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

    இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
    • பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

    உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.

    இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

    பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், அதீத வெப்பத்தால் மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மின்மாற்றிகள் பழுது, மின்மாற்றிகளில் தீப்பிடிக்கும் போன்ற சூழலை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தகுந்த பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலத்தில் அதிகபட்ச மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 22,000 மெகாவாட் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • 2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
    • மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும்.

    தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதி இடங்கள் குறையும் என அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். மறுசீரமைப்பு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். எங்களுடைய கணக்கிட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும். தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அதிக இடங்களை பெறும்.

    129 இடங்களுடன் நம்முடைய குரல்கள் பாராளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. 103 இடங்களுடன் நிலைமை மோசமாக இருக்கும்.

    தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் இடங்கள் மறுவரை செய்யப்படு வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ×