என் மலர்
சென்னை
- பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.
- எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.
தமிழ்நாட்டில் சாதி படுகொலை, ஆணவ படுகொலைகளை தூண்டி விடுபவர்கள் 2 பேர். ஒருவர் திருமாவளவன். இன்னொருவர் சுப.வீரபாண்டியன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சுப.வீரபாண்டியன் கூறியதாவது:
* நாங்கள் பிறந்த பிறகு தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன்னால் மனுநீதி இல்லையா?
* மனு நீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவ படுகொலைகளுக்கு காரணம்.
* பிரிவினை என்பதே இந்து சமயத்தின் நியதியாக இருக்கிறது.
* பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள்.
* பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.
* அவர் எங்களை பார்த்து குற்றம்சாட்டுவதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது.
* இப்படி பேசுவது கருத்து உரிமையில்லை. அவதூறு.
* எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.
* எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவர் நாகரீகமாக பேசினால் தான் ஆச்சரியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- வரும் 27, 28, 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 25, 26-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 27, 28, 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- கனகராஜ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
- இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்சி வடக்கு தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக 1½ ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன.
- தி.மு.க. அரசு உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர தி.மு.க. நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் தி.மு.க. அரசு தோல்வியடைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க. அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது தி.மு.க. அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
- மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
- அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.
ஒட்டன்சத்திரம்:
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற ஒருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான நல்லமுத்து என்ற கண்ணன் (வயது 40) மூலம் அந்த நோட்டுகளை பெற்று புதுச்சேரியில் மாற்றியதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நல்லமுத்து தரகராக செயல்பட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதுச்சேரியில் மாற்றி கொடுத்துள்ளார். இவருக்கு சேலம் மாவட்டம் சுந்தரம்வரதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் புதுச்சேரியில் புதிய நோட்டுக்கு பழைய நோட்டு தருவதாக மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ராமானுஜம் (48), பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற 20 சதவீதம் கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம்
கன்னிவாடி அடுத்து புதுப்பட்டிக்கு வந்த புதுச்சேரி போலீசார் ரெட்டியார்சத்திரம் போலீசார் உதவியுடன் நல்லமுத்து என்ற கண்ணன் குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதை அடுத்து அங்கு விரைந்து சென்று புதுச்சேரி போலீசார் நல்ல முத்து என்ற கண்ணனை கைது செய்து விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்லமுத்து என்ற கண்ணன் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு ரெயில்களை இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
- 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரும்பாலான ரெயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகமுள்ள விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக செல்லும் விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறை தொடங்கும்போது பொதுமக்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள்.
எனவே, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரெயில்களை இயக்கவும், வழக்கமான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரெயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்களில் முன்பதிவு, காத்திருப்போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரெயில்வே தயாரித்து வருகிறது.
இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை:
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.
இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-
திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.
அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.
இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
- அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.
- தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைக்க, மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது.
- தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?
சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு என்று கூறி உள்ளார்.
இதற்கு பதிலடியாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
- தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம தேடுவதற்காக தி.மு.க. மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களில் இறங்கி உள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு பின்பு கையெழுத்து போட மாட்டோம் என்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
தாய் வழிக்கல்வியை தான் அது ஊக்குவிக்கிறது. அமித்ஷா கூட, மருத்துவ, என்ஜினீயரிங் படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தை தி.மு.க. வணிக நோக்கத்தில் அணுகுகிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை.
இவர்கள் மொழி பிரச்சனையை கிளப்புவதற்கு மற்றொரு காரணம், இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. கேரளாவும், காங்கிரசை தோற்கடிக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது.
பி.எம். ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அதனை ஏற்று கொண்டு விட்டார்கள். தமிழகம் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. டெல்லி நிர்பயா, மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவ மாணவி கொலை ஆகியவை இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம், இங்கேயே அடக்கப்பட்டு, வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்? உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானா என்பதனை சொல்ல வேண்டும். போதை பொருளில் முக்கிய நபர் சிக்கி உள்ளார். அதேபோல் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்து உள்ளது. நிச்சயம் நான் சொல்கிறேன், தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துவிட்டார். ஆனால் இவர்கள் வேண்டும் என்றே, பிரச்சனையை கிளப்புகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கும், வடமாநிலங்கள் பலன் அடைய தானே செய்யும் என்று கேட்கிறீர்கள்.
மக்கள்தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு சிறு பகுதிகளுக்கு எம்..பி.க்கள். இருக்காது. தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின்தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது.
ஏற்கனவே ராகுல்காந்தி, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி பிரிக்கப்படும் என்று பிரசாரம் செய்தார். இப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது வெடகக்கேடானது. இங்கு வந்திருக்கும் கேரள முதல்-மந்திரியிடம் முல்லைப்பெரியாறு நீர் குறித்து கேட்கலாம் அல்லவா? கர்நாடக துணை முதல்-மந்திரியிடம் காவிரி நீர் கேட்கலாம் அல்லவா? அதேபோல் எல்லோரிடமும் நீங்கள் கல்விக்கொள்கையை ஏற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம்.
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக கேட்கிறீர்கள்?. இது வங்கிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். எனவே விரைவில் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
- திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில், அதேநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.
சென்னை:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம்-கன்னியாகுமரி, திருச்சி-தாம்பரம், இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06048), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06047), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






