என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
- 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார்.
முன்னதாக அங்கு முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தை அடைந்தார். அங்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உறுதி மொழி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கழகம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்.
தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம்.
அதற்காக, அயராது உழைப்போம். மீண்டும் கழக ஆட்சி அமைந்திட வெற்றிச் சங்கொலி முழங்குவோம். வீர சபதமேற்கிறோம். 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.
சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியை தொடர்ந்து 2-வது முறையாக, ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்திற்கு, பெருமையைத் தேடித் தந்தவர் அம்மா.
''எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையில் 2026-ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.
இந்த உறுதியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, ரமணா, பா.வளர்மதி, கோகுலஇந்திரா, வாலாஜா பாத் கணேசன், நடிகை கவுதமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்தியா, வி.எஸ்.பாபு, அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், முன்னாள் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் வக்கீல் ஆ.பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, டாக்டர் சுனில், வழக்கறிஞர் சதாசிவம், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, ஏ.எம்.காமராஜ், ஷேக் அலி, குமரி சந்தோஷ், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, வேல் ஆதித்தன், ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன், சைதை சொ.கடும்பாடி, ராணி அண்ணாநகர் கோவிந்தன், பி.டி.சி.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
- இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
- 2006 - 16 காலக்கட்டத்தில் சிங்காநல்லூர் எம்எல்ஏவாக இருந்தார்
- 2018-ல் ஓபிஎஸ் - இபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி, புதிய கூட்டணி குறித்து விவாதித்து வருகின்றன. இருக்கின்ற நிர்வாகிகள் இருக்கும் கட்சிகளை விட்டு, மாற்றுக் கட்சிக்கும் தாவும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். கோவை சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ -வாக இரண்டு முறையும், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராகவும் இருந்தவர் சின்னசாமி. இதில் அண்ணா தொழிற்சங்க பணத்தை கையாடல் செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு இவர்மீது புகார் எழுந்தது. இதனால் இவரை கட்சியில் நீக்கம் செய்து அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்அறிவிப்பு வெளியிட்டனர்.
தன்னைக் அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். மேலும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் துரோகிகள் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
- என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
- குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சி.வி.சண்முகம். இவர் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், மேல்சபை எம்.பி.யாகவும் உளளார். இவர் தன்னை பயங்கரவாதி என கூறி கைது செய்ய முயற்சிப்பதாக டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காலையில் பாராளுமன்றத்துக்கு செல்லும் போது ஒரு போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பையை சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
அவர் என்னை ஒரு பயங்கரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னை கைது செய்யப்போவதாக மிரட்டினார். பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. இந்த 2-வது அழைப்பாளர் மிரட்டல்களைத் தொடர்ந்தார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
இந்த குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுப்பது அதிகரித்து இருப்பதற்கு இது ஒரு சான்றாகும். இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றார்.
- ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
- பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.
ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.
நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர– சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்றவர்களுக்கு உலக மற்றுத்திறனாளிகள் தின வாழ்த்தகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர– சகோதரிகள் அனைவருக்கும், உலக மாற்றுத்திறனாளிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
- எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.
தென்காசி:
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.
மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.
எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
கோபி:
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான அர்ஜுனன் (43) என்பவரும் வந்திருந்தார். அவர் கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோபி -சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அர்ஜுனன் பரிதாபமாக இறந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இறந்த அர்ஜுனன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் எடப்பாடியில் இருந்து கார் மூலமாக கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் அவர் நேரடியாக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுனன் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அர்ஜுனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட கட்சி சார்பாக ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். கட்சி தலைமை சார்பாக மேலும் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா?
- 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல விழாவிற்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டிசம்பர் 31-ந்தேதி வரை உள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உறுதியான பின்பு கூட்டணி குறித்து தெரிவிப்பேன்.
துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.
2017-ம் ஆண்டு தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராகிய 18 எம்.எல்.ஏ.க்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல. இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?
அதேபோல் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்த சட்ட விதிகளை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டார். சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? இன்றைக்கு அ.தி.மு.க என்ற கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க.வை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி ஒரு வட்டார கட்சியாகவும் குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.
- வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
- அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.
கோபிச்செட்டிப்பாளையத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கூட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையத்தில் LED திரையில் வீடியோக்களை காண்பித்து, செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது கோபி தொகுதி முதன்மை தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபிசெட்டிபாளையமே அதிரும் வகையில் கூட்டம் கூடியுள்ளது. யார் யாரோ கனவு காண்கிறார்கள், அந்த கனவை அனைத்து மக்களும் வெள்ளமாக திறண்டு நொறுக்கிவிட்டீர்கள்.
50 ஆண்டுகளாக போராடி வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. மாநில நிதியிலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினேன்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செய்யப்படவில்லை.
டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று பார்த்தேன். விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்த இயக்கம் அதிமுக.
இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?
அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை
அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார்.
ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?
உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக.
எம்ஜிஆர் ஆட்சியில் MLA-வாக இருந்தார். ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்பொதெல்லாம் தூய்மையான ஆட்சி தரவில்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை நின்றவர்களை ரகுபதி கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.
- வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை' என்ற ஒரு கிராம முதுமொழிக்கேற்ப, தனக்கு அரசியல் வாழ்வளித்த புரட்சித் தலைவி அம்மாவின் முதுகில் குத்திவிட்டு 'கோபாலபுர கொத்தடிமைகளில்' ஒருவராகத் திகழ்ந்து வரும் திரு. எஸ். ரகுபதி என்ற திமுக மந்திரி, முதுகில் குத்துவது பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
அரசியலின் ஏணிப் படிகளில், இந்த நாலாந்தரப் பேர்வழி ரகுபதி ஏறுவதற்கு துணை நின்றவர்களை கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும். கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள் சேலத்தில் அளித்த பேட்டியில், விளம்பரத்திற்காக கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை அமைத்து ஷூ காலுடன் நடந்த திரு. ஸ்டாலின், எங்கள் புரட்சித் தமிழரைப் பற்றி, அவருடைய விவசாயத் தொழிலைப் பற்றி கேலியும் கிண்டலுமாக பேசியதற்கு அவர் பதிலளித்தார்.
நெல்லின் ஈர பதத்தை 18 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த அதிமேதாவி என்ன செய்தார் என்றும் ஈர பதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்த காரணத்தை ஏன் வெளியிட விடியா திமுக அரசு தயங்குகிறது என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேரடியாக பதில் சொல்ல வக்கற்ற முதலமைச்சர் திரு ஸ்டாலின், விவசாயிகளிடமாவது விளக்கிச்
சொல்லத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதைப் பற்றி இந்த விலாங்கு மனிதன் திரு. ரகுபதி தன்னுடைய சொந்த மாவட்டமான புதுக்கோட்டை விவசாயிகளிடம்
நேரில் போய் சொல்லத் தயாரா? டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, எங்கள்
அண்ணன் எடப்பாடியார் சுட்டிக்காட்டி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தினார்.
ஏற்றிய ஏணியையே எட்டி உதைப்பதுபோல், வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை. தற்போது எங்களது `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் மீது பாய்ந்து பிராண்டும் இந்த பிராணி, அறிவாலய எஜமானரை கடித்துத் குதறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
பயிர்க் காப்பீடு செய்யாத இந்த அரசின் தவறை சுட்டிக்காட்டினார்; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை எடுத்து வைத்தார். கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல நாட்களாக குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை சுட்டிக் காட்டினார்.
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின், விவசாயிகள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினார். மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டார்.
இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் பாதிக்கப்படும்போது வறட்சி நிவாரண நிதி, வெள்ள காலத்தில் நிவாரணம் உள்ளிட்ட சாதனைகளை விவரித்தார். ஆனால், ஸ்டாலினோ மழை வெள்ள நீரில் நனைந்து முளைவிட்ட நெல் கதிர்களை
'ட்ரே' வைத்து சென்னையில் பார்வையிட்டதை சுட்டிக் காட்டி, விடியா திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்புடன்
இருப்பதைக் குறிப்பிட்டார்.
மொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும் வகையில் கர்நாடக அரசு முயற்சிக்கும் மேகதாது அணை திட்டத்தை தன் சுயநலத்திற்காக, கண்டும் காணாமலும் இருக்கும் திரு. மு.க. ஸ்டாலினின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் முறையாக கடைமடை வரை செல்கிறதா என்பதைக்கூட பார்க்காமல், வெற்று விளம்பரத்திற்காக ஒருசில நடவடிக்கைகளை எடுக்கும் திரு. ஸ்டாலினின் விளம்பர மாடல் அரசை
தோலுரித்துக் காட்டினார்.
பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்னவென்றால், குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான். இவை எதற்கும் முறையாக பதில் சொல்ல வக்கில்லாமலும், வேளாண் துறைக்கென்று ஒரு மந்திரி, உணவு வழங்கல்
துறைக்கென்று ஒரு மந்திரி என்று இருவர் இருக்கும்போது, முந்திரிக் கொட்டை போல தன் இருப்பைக் காட்டிக்கொள்ள
வேண்டிய அவசியம் ஒட்டுண்ணி ரகுபதிக்கு ஏன் வந்தது? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டே பழக்கப்பட்ட
திமுக கும்பலில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ, தான் படித்த படிப்பைக்கூட மறந்துவிட்டு உளறுவாயராக
திரு. ரகுபதி இருப்பதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
அறிவாலயத்தின் வாசலில் நின்றுகொண்டு பதவிப் பிச்சை எடுக்கும் ரகுபதிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ, அதன் பொதுச் செயலாளரைப் பற்றியோ, அர்த்தம் இல்லாத வகையில் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் உங்கள் தலைவர் திரு.ஸ்டாலினையோ அவரது அருந்தவப் புதல்வர் திரு. உதயநிதியையோ பாராட்டி, நாமாவலி பாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
`யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'
என்பதை எச்சரிக்கையோடு திரு. ரகுபதிக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.






