என் மலர்tooltip icon

    சென்னை

    • முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார். அமித்ஷா வீட்டுக்கு அல்ல.
    • தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து நிற்கும் முதலமைச்சரைப் பார்த்துப் பேச அருகதை இருக்கிறதா?

    தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பானா ரேஞ்சில் கோழை பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    2031 சட்டமன்றத் தேர்தல் வரையில் பாஜகவோடு கூட்டணி இல்லை எனப் பேசிய வீராதி வீரர் யார்? கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக கூட்டணி கிடையாது என விதவிதமான மொழிகளில் நீங்கள் பேசிய வீடியோக்கள் இன்றைக்கும் ட்ரோல் ஆகிக் கொண்டிருக்கிறது.

    அது உங்கள் முகத்திரையைக் கிழிக்கும் கண்ணாடிதானே! அது உங்களைப் பார்த்துத்தானே சிரிக்கிறது.

    தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லி செல்லாத நீங்கள், உங்கள் மகன் மிதுனுக்காகதானே அமித்ஷாவை போய் பார்த்தீர்கள்.

    ரெய்டில் குடும்பம் சிக்கி விடக் கூடாது என்பதற்காகத்தானே பாஜகவோடு கூட்டணி வைத்தீர்கள். அதற்குக் காரணம் உங்கள் குடும்பம் தானே?

    ''பாஜகவோடு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை'' என வீராவேசமாகப் பேசிய 'சூனாபானா' எடப்பாடி பழனிசாமி, வெள்ளைக் கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திக் கொண்டு போனர்.

    கார்கள் மாறி மாறி கள்ளத்தனமாக அமித்ஷாவை டெல்லியில் போய் பார்த்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி!

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாத பழனிசாமி, தன் குடும்பத்திற்குப் பாதிப்பு என்றதும் டெல்லிக்கு ஓடிச் சென்று அமித்ஷாவின் காலடியில் அதிமுகவை அடகு வைத்தார்.

    கடந்த ஜனவரி 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தொடர்பாக 26 இடங்களில் நடந்த சோதனையில் 10 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது. அன்று முதல் கைது காய்ச்சலில் பயந்து வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தவர்தான் பழனிசாமி.

    அந்த வழக்கில் இருந்தும் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை சோதனைகளில் இருந்தும் தப்பிக்கவும் பாஜக கூட்டணிக்குத் தாவியவர்தான் பழனிசாமி.

    "படுத்தே விட்டாரய்யா..." என்ற சொற்களுக்கு உருவமே கூவத்தூர் எடப்பாடி பழனிசாமிதான். அந்த கூவத்தூரில் கற்ற கலையை அமித்ஷா வீட்டு வாசல் வரையில் போய் அரங்கேற்றினார். முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார்.

    அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு. நாடகங்களை வைத்து அரசியல் செய்யலாம் எனும் பகல் கனவில் அடுக்கடுக்கானப் பொய்களை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

    இன்றைக்கு அனைத்திந்திய அளவிலேயே பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்பதை உலகறியும். ஊழலில் முதுகலைப் பட்டம் பெற்று, ஊதாரி ஆட்சி நடத்தி பாஜகவிடம் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்கு டெல்லி பயணம் என்றால் தவழ்ந்து செல்வது மட்டும்தானே தெரியும்.

    ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கே சவால் விடும் வகையில் பாஜகவின் கால்களில் ஊர்ந்து சென்று அடிமை ஊழியம் செய்யும் பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து நிற்கும் முதலமைச்சரைப் பார்த்துப் பேச அருகதை இருக்கிறதா?

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் கொடுத்த பெண்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டிப்பார்த்த பழக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் NIC நிறுவனமே அளித்த விளக்கங்களை மறைத்து பச்சைப் பொய்யைக் கூசாமல் அடித்து விடுகிறார் பழனிசாமி.

    அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் அதிமுகவின் வட்டச் செயலாளர் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் நினைத்துக் கொண்டாரா பழனிசாமி?

    பொள்ளாச்சி தொடங்கி அண்ணாநகர் பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமி,

    பெண்களுக்குத் தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என விஷமப் பிரச்சாரத்தைச் செய்து மடைமாற்றலாம் என மடத்தனமான அரசியல் செய்தால் மக்கள் நம்பிவிடுவார்களா?

    தமிழ்நாட்டில் நீட்டை நுழைத்துப் பல மாணவர்களின் உயிர்கள் பறிபோகக் காரணமான பழனிசாமி, திமுக கொடுத்த அழுத்தத்தையும் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் கொண்டு வந்ததுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு.

    அதற்காகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்த போது ஆளுநரை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தியது. அன்றைக்கு அதிமுக ஆளுநரை எதிர்க்கக் கூட துணிவில்லாமல் தூங்கி கொண்டிருந்தது.

    மருத்துவப்படிப்புக்கு மட்டும் இருந்த உள் ஒதுக்கீட்டைப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்படிப்புகளுக்கு நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பலனடையச் செய்து வருவது திராவிட மாடல் அரசு.

    நீட்டை நுழைத்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையைக் காவு கொடுத்த அதிமுக-வினர் வெட்கித் தலைகுனியாமல் வீர வசனங்கள் பேசித் திரிவது வெட்கக்கேடு.

    நீட், உதய் மின் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல், மற்றும் தேசியக் குடியுரிமை சட்டம் (CAA) போன்றவற்றிற்கு ஆதரவு அளித்து துரோகம் என்றால் பழனிசாமி, பழனிசாமி என்றால் துரோகம் என துரோக ஆட்சி நடத்திய துரோகி பழனிசாமி மாநிலத்தின் உரிமைகளுக்காக நாளும் போராடிக்கொண்டிருக்கும் திமு கழகத்தைப் பார்த்து குற்றம் சொல்ல எந்த அருகதையும் இல்லை,

    ஆளுநர்களுக்கு அடிபணிந்து அவர்களை நாட்டாமை செய்யவிட்ட அடிமை ஆட்சிதான் பழனிசாமியின் அவல ஆட்சி. ஆளுநர்களின் சண்டித்தனத்தை அடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பைப் பெற்று இன்று இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் ஆட்சி!

    வரிப்பகிர்வு, வெள்ள நிவாரணம், கல்வி நிதி எனப் பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் நிதி உரிமைகளை முடக்கும் பாஜகவைக் கேள்வி கேட்கத் துப்பில்லை. வக்கில்லை. திராணி இல்லை இந்த வீர வசனங்கள் எல்லாம் நமக்குத் தேவைதானா பழனிசாமி?

    தமிழ்நாட்டின் எந்த உரிமையைப் பெற பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்று சொல்ல எதாவது பதில் வைத்திருக்கிறாரா பாதம்தாங்கி பழனிசாமி? தனது மகனுக்காகவும் சம்பந்திக்காகவும் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டு, பாஜகவின் செய்தி தொடர்பாளராக பழனிசாமி மாறுவதற்குப் பதில் கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம்.

    பழனிசாமியின் அபத்தங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் ஒருநாளும் வெற்றியடையாது. மக்களுக்கு உண்மைகள் தெரிந்ததால்தான் பத்து தோல்வி பழனிசாமி எனப் பட்டம் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
    • வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துணைவேந்தர் நியமன அதிகாரம் விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

    இடைக்கால தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது.
    • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

    சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி அவர்களுக்கு, ரூ.17 லட்சம் மதிப்பிலான 390 சதுர அடியில் இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளன.

    மேலும், ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

    இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர்.

    சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. (ஒரு வீடு 17 லட்சம்: 390 சதுர அடி)

    மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர். திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர்ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூபாய் 5000. வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30000. மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2500 என்ற அடிப்படையிலும் குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள். உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி..!
    • அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! என்று விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக," தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

    சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை

    "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

    ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க.ஸ்டாலின்

    அவர்களே- அது கண்ணாடி! …

    உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

    அறிவாலய மேல் மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்

    தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

    எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

    எது ஸ்டாலினின் கை?

    அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.

    ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

    ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

    அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

    தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!

    7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

    அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!

    கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

    இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...

    நான் கேட்ட கேள்வி என்ன?

    யார் அந்த தம்பி ?

    உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?

    உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும்

    ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

    டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

    உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!

    உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!

    ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

    மீண்டும் கேட்கிறேன்- யார் அந்ததம்பி?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொம்மை முதலமைச்சரின் நிர்வாக சீர்கேட்டிற்கு மற்றுமொரு உதாரணம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி.
    • திமுக-வின் அவல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெண்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ் நாடு மாறிவிட்டதற்கு மற்றும் ஒரு சம்பவம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    அப்பாவி பெண்களை 'சார்'-களுக்கு இரையாக்கும் ஒருசில திமுக நிர்வாகிகளின் லீலைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் கல்வியைக் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்கள் தங்கள் வரம்புகளை மீறி உளவியல் ரீதியாக பெண்களை, குறிப்பாக உடன் பணியாற்றும் ஆசிரியைகளையும், மாணவிகளையும் தகாத வார்த்தைகளில் பேசுவதும், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    'சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்' பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது; உடல் உருவ அமைப்பை கேலி செய்வது; அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது; பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மன உளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.

    ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம், தகாத செயல்களில் ஈடுபடும் பேராசிரியரைப் பற்றி புகார் அளித்தும், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவரது செயல்களைக் கண்டிக்கவும் இல்லை. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் `விசாகா கமிட்டி' அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? மாணவிகள் புகார் கொடுத்தும் ஒருவருட காலமாக

    ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, யாருடைய அழுத்தம்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

    ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் `விசாகா கமிட்டி' பற்றி அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையாளர் ஒரு பதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், தற்போது, விடியா ஸ்டாலின் மாடல் அரசு இந்தப் பல் மருத்துவக் கல்லூரிக்கு `விசாகா கமிட்டி' குறித்து என்ன பதில் அளிக்கப் போகிறது? இந்நிகழ்வு, இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியரை தெய்வமாக வணங்கும் வழியில், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனும் பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

    ஆனால் இன்று, பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 'பல சார்களுக்கு இரையாக்கும் நிகழ்வுகளும்' அன்றாடம் நடந்த வண்ணம் இருந்தாலும், இதைப்பற்றி எந்தக் கவலையும் இன்றி தினம் தினம் மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் முதலமைச்சரின் நிர்வாகச் சீர்கேட்டால் இன்று தமிழ் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

    பெண் பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அஞ்சி நடுங்கும் நிலை இந்த நீர்வாகச் சீர்கேடான ஆட்சியில் ஏற்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதற்கொரு முடிவு கட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.

    "வேலியே பயிரை மேய்வது போல்" இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தமிழ் நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும்,

    மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
    • விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல இருந்த 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.

    ஆனால், நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தென்மேற்கு பருவமலை கேரளாவில் இன்னும் 3 முதல் 4 நாட்களில் துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    ஆலந்தூர்:

    தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி தீபக் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பான விமான சேவை, பயணிகளின் சிரமங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.

    • இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
    • கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! என்று விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

    சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

    "பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

    இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

    இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

    கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என்று கூறியுள்ளார். 

    • ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தி.மு.க. அரசிற்குத் துணிவிருக்கிறதா?
    • அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற தி.மு.க. அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

    குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையான அடக்குமுறைகளை ஏவி தி.மு.க. அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

    அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் தி.மு.க. அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தி.மு.க. அரசிற்குத் துணிவிருக்கிறதா?

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தி.மு.க. அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற தி.மு.க. அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

    ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் பாதிக்கப்படும் அனகாபுத்தூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தேன். அதே ஆண்டு நவம்பர் 14-ம் நாள் மீண்டும் அம்மக்களை நேரில் சந்தித்து பாதிக்கப்படும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு வீடுகளை இடிக்க நாம் தமிழர் கட்சி ஒருபோதும் விடாது என்றும் உறுதி கூறியிருந்தேன். இதையடுத்து வீடுகளை இடிக்கும் திட்டத்தைக் கிடப்பில் போட்ட தி.மு.க. அரசு தற்போது மீண்டும் வீடுகளை இடிக்க முயல்வதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் ஆதரவற்று நிற்கும் அனகாபுத்தூர் மக்களை இன்று (21-05-2025) மீண்டும் நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை மக்கள் இருக்க இடமற்ற நிற்கதியான நிலைக்கு ஆளாக ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதியை அளித்து, அம்மக்களின் கண்ணீர் துடைத்து கவலை போக்கி, அச்சம் நீக்கி ஆறுதல் கூறவிருக்கிறேன்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்றும், வீடுகள் இடிக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் புகார் அளித்துள்ளார்.
    • 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படம் தொடங்கப்பட்டது.

      பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ரூ.25 லட்சம் மோசடி புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்" என்று சமீர் அலிகான் தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
    • சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

    சென்னை:

    சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.

    இதற்காகவே போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வானத்தை இயக்கி விபத்தில் சிக்குவதும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ எண்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×