என் மலர்tooltip icon

    சென்னை

    • நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கினர்.
    • நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

    சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தால், 15-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

    • எத்தனையோ 'ஸ்கோப்' இருக்க, 'பயோஸ்கோப்' காட்டிக் கொண்டிருக்கிறார் 'சூனாபானா' இ.பி.எஸ் என்றார் ஆர்.எஸ்.பாரதி.
    • எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் என்றார் ஆர்.எஸ்.பாரதி.

    எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ 'ஸ்கோப்' இருக்க, 'பயோஸ்கோப்' காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ 'ஸ்கோப்' இருக்க, 'பயோஸ்கோப்' காட்டிக் கொண்டிருக்கிறார் 'சூனாபானா' எடப்பாடி பழனிசாமி. நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள். அதனைத் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார்? என எதிர்க்கட்சிகளுடன் போட்டா போட்டி நடக்கிறது. ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான அறிக்கையைக் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்குத்தான் தமிழ்நாட்டின் எத்தனை கிளைக் கழகங்கள்?

    எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை(?) பார்க்கும்போது, ''ஏய் அங்குட்டு போய் விளையாடுங்கப்பா'' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிசாமியின் காமெடி கதறல்கள் காதுகளைக் குளிர வைக்கின்றன.

    ''நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்'' எனப் பொதுக்குழு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தெருமுனை என பழனிசாமி புலம்பியதை எல்லாம் கணக்கிட கால்குலேட்டரே திணறும்! நிரந்தர பொதுச் செயலாளர் என எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகட்டிக் கொண்டு போனவர் யார்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் இருக்கையை அபகரித்த அபகரிப்பாளர் அல்லவா பழனிசாமி.

    மார்ச் 25-ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் கூட டெல்லிக்கு அவசரமாகச் செல்லும் அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன வேலை இருந்தது? டெல்லியில் எதற்காக டீல் போட்டார்?

    "இபிஎஸ் யாரைச் சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. அப்படிச் சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்'' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். பழனிசாமி செய்தாரா? இல்லையே!

    "பிரத்தியேகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தைப் பார்வையிடவே வந்துள்ளேன்" எனப் பொய் முலாம் பூசியவர்தானே பழனிசாமி.

    டெல்லியில் உள்ள அண்ணா திமுக அலுவலகத்துக்கு ஒழுங்காக வெள்ளை அடித்திருக்கிறார்களா? எனப் பார்க்கப் போனவர், ஏன் மூன்று கார்களில் மாறி மாறிப் போனார்? 'சாமி' திரைப்படத்திற்கும் 'பழனிசாமி' கேரக்டருக்கும் சம்பந்தம் உண்டு என்றால் இந்தச் சமூகம் நம்ப வேண்டும்.

    சாமி படத்தின் வில்லன் பெருமாள் பிச்சை கதாநாயகனிடம் இருந்து தப்பிக்க கிளைமேக்ஸில் கார்கள் மாறி மாறிப் போவார். அந்த பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி.

    அன்றைக்கு டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு நடப்பதற்கு முன்பே, "2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும்' என மத்திய மந்திரி அமித் ஷா ட்வீட் போட்டாரே! பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட்டணிக்கான அதிகாரத்தை அமித்ஷாவிடம் தாரை வார்த்ததை எடப்பாடியார் மறந்துவிட்டாரா?

    அமித்ஷா சந்திப்பு பற்றி அடுத்த நாள் 26/3/25 அன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றிப் பேச எந்த அவசியமும் இல்லை" என சூனாபானாவாக முழங்கிவிட்டு, 11/4/25-ம் தேதி அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. அப்போது அமித்ஷா பக்கத்தில் அமர்ந்திருந்த சூராதி சூரர் யார்? இதுதான் பழனிசாமி சொன்ன ஓராண்டுக் காலமா? பச்சைப் பொய் பழனிசாமி என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக் கொண்டே இருந்தார்!

    முதலில் 'அதிமுக அலுவலகம் பார்க்கப் போனேன்'. பிறகு 'மக்கள் பிரச்னைகளுக்காக அமித்ஷாவை சந்தித்தேன்' என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்படாத தீபாவளியாக மாறியது. இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க, பொய்க் குப்பைகளை அள்ளி வீசி, தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம்.

    முதல்-அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு பற்றி நேரடியாக வலியுறுத்தி இந்திய மக்கள் முன் எடுத்து வைக்க நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஆனால், அதைத் திரித்து தனது அவதூறு அரசியல் குப்பைகளை அள்ளி வீசி தமிழ்நாடு அரசு மீதும் முதல்-அமைச்சர் மீதும் களங்கம் கற்பித்துவிடலாம் என பழனிசாமி போட்ட கணக்கெல்லாம் தப்புக்கணக்கு ஆனதால், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலச் சமாளிக்க நீங்கள் போடும் வேடங்கள் உங்களை இன்னும் தோலுரிக்கின்றன.

    'பில்ட்டிங் ஸ்டராங்க் பேஸ் மட்டம் வீக்' என்பது போல எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர்.

    தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறி கொடுத்து அடிமை சேவகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் பழனிசாமிக்கு அடிப்படை அறிவுகூட இல்லை.

    தனது ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புரளிகளை அள்ளிவிட்டு குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

    உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் அராஜகத்திற்குக் குட்டு வைத்து இடைக்காலத் தடை விதித்ததும் தனது டெல்லி ஓனர்களோடு சேர்ந்து, தான் ஓட்டிய பித்தலாட்டப் புரளி படம் 'பிலாப்' ஆன விரக்தியில் இப்போது வாய்க்கு வந்ததை உளறித் திரிகிறார். தனது ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்கிற வெட்கமே இல்லாமல் திமுக வை குற்றம் சாட்ட நா கூசவில்லையா?

    தனது உறவினர்களுடைய வீட்டில் நடந்த ரெய்டுகளுக்கு பயந்துதான் பாஜகவின் பண்ணையடிமையாக பழனிசாமி மாறினார். அதற்காகத்தான் அதிமுகவை பாஜக கூட்டணியில் அடமானம் வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் அறியாத பிள்ளைகளுக்கு இந்த உண்மைத் தெரியும், 23-ம் புலிகேசியாக வாழும் பழனிசாமி, 'ரெய்டைப் பார்த்து எனக்குப் பயமா?" என வீர வசனம் பேசுவதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகும்.

    தனது உறவினரின் ஊழலுக்குச் சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறார் பழனிசாமி, 650 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் எனும் ஊழல் குற்றச்சாட்டை "Discrepancies" என்கிறாரே பழனிசாமி ஊழலை "Discrepancies" என மாற்றுவதற்குத்தான் டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவை சந்திக்கச் சென்றாரா? பூனைக்குட்டி வெளிய வந்துவிட்டது என்பது போல அதிமுக வை அடகு வைத்ததற்கான டெல்லி டீலிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி.

    'நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல - உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையிலிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்று!' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. அதாவது மோடி அரசுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

    மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸின் ஹிமந்த பிஸ்வா, மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, சிவசேனாவைச் சேர்ந்த பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் போன்றவர்கள் மீதான அமலாக்கத் துறை வழக்குகளை எல்லாம் பாஜக வாசிங் மிஷின் எப்படி சுத்தப்படுத்தியது.

    அந்த வாசிங் மிஷினில் விழுந்தவர்தானே பழனிசாமி அன் கோ. அதன் மூலம் தன் உறவினர்கள் மீதான வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்ய அதிமுக என்ற ஆலமரத்தையே கோடாரியாகப் பயன்படுத்தினார்.

    'பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம்' என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே!

    எடப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் 'ஒய்யால என்ன மாதிரி கூவுறான்' என்பது போல பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது. தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அறிவார்ந்த சூழலை மாணவர்களுக்கு உருவாக்கும் முதல்வர் படைப்பகங்கள்.
    • ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு.

    அறிவார்ந்த சூழலை மாணவர்களுக்கு உருவாக்கும் முதல்வர் படைப்பகங்கள் கூடுதலாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கூடுதலாக முதல்வர் படைப்பகங்கள் திறக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து, ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
    • 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் புதிய கல்லூரிகள்.

    மார்ச் மாதம் தான் பட்ஜெட்டில் அறிவித்தோம், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிவிட்டோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மார்ச் மாதம்தான் TNBudget2025-இல் அறிவித்தோம்! சற்றும் தாமதியாமல் இந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கிவிட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள்.
    • எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெற்றியாளர்களை நேரில் அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன்.

    UPSC குடிமைப் பணித் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்கமாக

    நான் முதல்வன் திட்டம் அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது.

    கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகத் தயாராகி, எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குட்கா, பான் மசாலா தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியது.

    இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குட்கா, பான் மசாலா மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2026ம் ஆண்டு மே 23 வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    • தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது.
    • 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, சமீபத்தில் வெளியிட்ட புதிய 13 மணல் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதித்தால் நதிநீர் போக்கில் மாற்றம் ஏற்பட்டு நிலத்தடி நீர் முற்றிலும் வரண்டு போக வாய்ப்புண்டு என தெரிவிக்கின்றனர். எனவே இந்த 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே முறையான அனுமதி உள்ள கல்குவாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு சரியாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட வேண்டும். முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகளை உடனடி யாக முட வேண்டும்.

    எனவே தமிழக அரசு அத்தியாவசியத் தேவையான மணல் விவகாரத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும், பொது மக்களுக்கு தரமான மணல் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமாக, முறையாக மணல் குவாரிகளை இயக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏதோ ஒரு நாள் அறிக்கையில் ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்து விட்டு செல்கின்ற முதலமைச்சர் இல்லை எங்கள் முதலமைச்சர்.
    • 2026-ம் ஆண்டு மகுடம் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை விமர்சித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் இன்று பதில் சொல்ல தயாராக இல்லை. களத்திற்கு வரட்டும் அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ அதை விட 100 மடங்கு வேகமாக ஒரே அடியில் பிடரி சிலிர்க்கின்ற வகையில் அடிப்பதற்கு தி.மு.க. களத்தில் தயாராக நிற்கின்றது. ஏதோ ஒரு நாள் அறிக்கையில் ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்து விட்டு செல்கின்ற முதலமைச்சர் இல்லை எங்கள் முதலமைச்சர். அனுதினமும் மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடியவர்.

    2026-ம் ஆண்டு மகுடம் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். இது போன்ற அறிக்கைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்ற இந்த கட்டுமானம் கடற்கரை கட்டிய மணல் கோட்டைக்கு சமமானது. நிச்சயம் தகர்க்கப்படும், தகர்த்து எறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.
    • விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட பரிசளிப்பு அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது.

    மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் 3 கட்டங்களாக பரிசளிப்பு விழாவை நடத்த கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் தகுந்த பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளும் த.வெ.க. சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவுபடி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    • ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது.

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுதினம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?
    • உங்கள் வீட்டுத் "தம்பி" ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது?

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    "நானும் டெல்லிக்கு போனேன்... நானும் தலைவர் தான்" என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள்

    மு.க.ஸ்டாலின் போதும்ம்ம்ம்ம்!

    "மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்?

    தமிழ்நாட்டுக்கான நிதி"க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி"-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…?

    அதற்க்கான உண்மை பதில் என்ன?

    ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?

    உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள "நிதி"களையும், அவர்களுக்கு துணையான "தம்பி"களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?

    நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல- உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று!

    பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் "#MissionSuccess" என்ற உங்கள் கூவலுக்கு பின்னால்,

    உங்கள் #MissionFailure ஆன கண்ணீர் நன்றாகப் புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். (முன்னாலும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தால் Nostalgia-வாக இருந்திருக்கும்.)

    அப்புறம், எதிர்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் அவல ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். ஏதேனும் பயன் இருந்திருக்கும்.

    எப்போது பார்த்தாலும் "ரெய்டுகளுக்கு பயந்து" என்று சொல்கிறீர்களே? உள்ளபடியே கேட்கிறேன்- எந்த ரெய்டைப் பார்த்து எனக்கு பயம்? இந்த ரெய்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    நீங்கள் குறிப்பிடும் உறவினர்கள் எனக்கு உறவினர் ஆகும் முன்னரே பல தொழில்களை செய்து வந்தவர்கள்- இரு முறை வருமான வரி சோதனைகளைக் சந்தித்தவர்கள். Discrepancies இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறார்கள்.

    இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் இது போன்ற போலி குற்றச்சாட்டுகளை அள்ளி தெளிப்பது வெட்கக்கேடானது.

    மாறாக, உங்கள் வீட்டுத் "தம்பி" ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன? எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர்? இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் தயாரா மு.க.ஸ்டாலின்? #யார்_அந்த_தம்பி ?

    இத்தனை நாட்கள் உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கிக் கதறுவதை நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
    • மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

    தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப்படுகிறது. கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.

    சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தது.

    இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரி மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், அதுவரை தமிழில் பெயரை பலகை வைக்காத கடைகள் கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதுஎன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ×