என் மலர்
சென்னை
- குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது.
- குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல.
சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்திருந்தது. மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது. இது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது.
குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல" என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதம் சம்பந்தப்படவில்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என சனாதன சக்திகள் செயல்படுகின்றன.
- 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார் வைகோ.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துள்ளார்.
அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் சந்தித்துள்ளார்.
முதலமைச்சரை சந்தித்த பின்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதியாக இருப்பேன்.
2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என சனாதன சக்திகள் செயல்படுகின்றன.
இமயத்தைக் கூட அசைத்து விடலாம், திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம்.
- நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்கள் மகன் அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம்.
இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். இது யாராளும் மன்னிக்க முடியாதது. பெற்ற தாய்க்கு மட்டுமே அதன் வலி தெரியும்.
உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. இருந்தாலும், நீங்கள் மனம் தளராமல் இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்களும் மனம் நிம்மதியுடன் இருப்பார்கள்.
நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்.
மனம் தளராமல் இருங்கல். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நகைத்திருட்டு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கூட, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.
- கொலை செய்வதை விட அதை மூடி மறைக்க முயல்வது பெருங்குற்றம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல்துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக இருந்த திமுக அரசு, அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறது. சொந்த மக்களையே படுகொலை செய்யும் திமுக அரசு என்னதான் நாடகமாடினாலும், கொடூரத்தின் சின்னமாக அதன்மீது படிந்திருக்கும் இரத்தக் கறையை போக்க முடியாது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையக் காவலர்களால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. திமுக அரசில் காவல்துறை எவ்வாறு கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்தப் படுகொலை உறுதி செய்துள்ளது.
நகைத்திருட்டு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கூட, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. ஆனால், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலுக்கு வந்த சிலர், அவர்களின் மகிழுந்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர்களிடம் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு கூட செய்யாத காவல்துறையினர், அஜித்குமார் உள்ளிட்ட சிலரை சட்டவிரோதமாக பிடித்துச் சென்று அவர் பணியாற்றிய கோவிலிலும், வேறு இடங்களிலும் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதற்கான காரணம் நகையை இழந்த பெண்கள், மூத்த இ.ஆ.ப. அதிகாரி ஒருவரின் உறவினர்கள் என்பது தான். அதாவது அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டளையிட்டால் அப்பாவி மக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து கொலை செய்யும் படையாகவே தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. இது நியாயமா?
அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்திய காவலர்கள், மனித மிருகங்களாகவே மாறியிருக்கின்றனர். அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாக இடைக்கால உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. கை, கால்களில் தொடங்கி உச்சந்தலை வரை காயங்கள் உள்ளன. விசாரணையின் போது வாயில் 5 முறை மிளகாய் பொடியைத் தூவி அடித்துள்ளனர்; அந்தரங்க உறுப்புகளிலும் மிளகாய் பொடியைக் கொட்டி கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அளவுக்கு கொடூரங்களை நிகழ்த்த வேண்டும் என்றால், அதற்கான ஆணை காவல்துறையில் உயர் நிலையிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். அப்படியானால், அந்த ஆணையை வழங்கிய அதிகாரி யார்? அஜித்குமாரை நன்கு அடித்து விசாரிக்கும்ப்டி ஆணையிட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்?
கொலை செய்வதை விட அதை மூடி மறைக்க முயல்வது பெருங்குற்றம். அந்தக் குற்றத்தை ஆளும் திமுகவே செய்திருக்கிறது. சிவகங்கை திமுக மாவட்ட நிர்வாகி சேங்கை மாறன் தலைமையிலான குழுவினர் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் பேசி ரூ.50 லட்சம் வரை பணம் கொடுப்பதாகவும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் பேரம் பேசியிருக்கிறார். இந்த விவரங்கள் உயர்நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் எந்த நேரமும் அஜித்குமாரின் வீட்டிலேயே முகாமிட்டிருந்து, அங்கு வரும் யாரிடனும் சுதந்திரமாக பேச முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரும் பல வகைகளில் தடுக்கப்பட்டிருக்கிறார். கொலைக் குற்றத்தை மறைக்க திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அதிகாரம் படைத்தவர்களின் கூலிப்படையாக காவல்துறை செயல்பட அனுமதித்தது, அப்பாவி இளைஞர் விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்தது, கொலையை மறைக்க முயன்றது என ஏராளமான தவறுகளையும், குற்றங்களையும் செய்த தமிழக அரசு, இப்போது இளைஞர் குடும்பத்திற்கு சில உதவிகளை செய்து அனைத்தையும் மூடி மறைக்கத் துடிக்கிறது. இது நடக்காது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது.
அப்பாவி இளைஞரை அடித்து விசாரணை நடத்தத் தூண்டிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரி யார்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்; இதில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்பட வேண்டும்; கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் தவிர ரூ,.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக மக்களுடன் மனிதநேயத்துடன் பழகுவது எப்படி என்பது குறித்து காவல்துறைக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.
- கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதிக்கு முன்பு மீட்டர் வைப்புத்தொகை ரூ.2 ஆயிரமாக இருந்தது.
சென்னை:
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த 2 பிரிவுகளிலும் புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம், மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பலவகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது. இந்த கட்டணம் ஒருமுறை செலுத்தக்கூடியதாகும்.
இந்த நிலையில் மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் பல்வேறு வகை கட்டணங்களையும் 3.16 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரு முனை பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,070-ல் இருந்து, ரூ.1,105 ஆகவும், மீட்டர் வைப்பு தொகை ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும் உயர்ந்துள்ளது. வளர்ச்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,095 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.215-ல் இருந்து ரூ.220 ஆகவும், வைப்புத்தொகை ரூ.320-ல் இருந்து ரூ.330 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேபோல் மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில் வளர்ச்சி கட்டணம் மட்டும், தரைக்கு அடியில் மின் வினியோகம் செய்யும் இடம் மற்றும் மின் கம்பம் வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடம் என தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர தாழ்வழுத்த பிரிவில் வீடுகளில் தீயில் எரிந்த சேதமடைந்த மீட்டரை மாற்றும் கட்டணம் ரூ.1,070-ல் இருந்து ரூ.1,105 ஆகவும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.645-ல் இருந்து ரூ.665 ஆகவும் அதிகரித்துள்ளன. இதேபோல் பல சேவைகளின் கட்டணங்கள் தாழ்வழுத்த மற்றும் உயர் அழுத்த பிரிவுகளில் தனித்தனியே உயர்த்தப்பட்டு உள்ளன.
வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டண உயர்வும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது வீடு கட்டுபவர்கள் புதிய தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதிக்கு முன்பு மீட்டர் வைப்புத்தொகை ரூ.2 ஆயிரமாக இருந்தது. அது தற்போது ரூ.2,215 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மின் பயன்பாடு வைப்பு தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.1,990 ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.11,050 ஆகவும், மின் இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1,660 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.220 ஆகவும் அதிகரித்து உள்ளது. மொத்த கட்டணம் ரூ.9050-ல் இருந்து ரூ.17,135 ஆகவும் 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
- தமிழக அரசின் ஆலோசனையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனம் போலீஸ் டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை போலீசாரே காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படையில் இடம்பெற்றிருந்த 5 போலீசார்தான் காவலாளி அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி அவரை கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
தனிப்படை காவலர்களை பொறுத்தவரையில் அவர்கள் எப்போதுமே குற்ற வழக்குகளில் விசாரணை நடத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஏதாவது ஒரு வழியில் குற்றவாளியிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான வித்தையை அவர்கள் கற்று வைத்திருப்பார்கள். சில குற்ற வழக்குகளில் உண்மையிலேயே தவறு செய்திருந்த குற்றவாளி உண்மையை ஒத்துக்கொள்ள மறுப்பது வழக்கம்.
இது போன்ற நேரங்களில் அந்த குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அடித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது காவல்துறையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இது போன்ற சூழலில் தான் ஒன்றும் அறியாத அப்பாவியான காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீசார் 5 பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து உயர்போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைப்பதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின் கீழ் செயல்படும் சிறப்பு படைகள் நிரந்தரமாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் ஆகியோர் தங்களுக்கு கீழ் பணியாற்ற தனிபடைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர பகுதிகளில் துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோரின் கீழ் செயல்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசாரை காவல் நிலைய பணிகள் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் ஆலோசனையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை போலீசார் இனி விசாரணை கைதிகளிடம் எல்லை மீறி நடந்து அவர்களை அடித்து துன்புறுத்துவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
- கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30-இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் இரா. அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.
- இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் ""சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:
1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம்
2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம்
3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம்
4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம்
5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம்
6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம்
7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம்
8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம்
9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம்
10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம்
11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம்
12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம்
13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம்
14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம்
15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம்
16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம்
17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம்
18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம்
19. பாலகுமார் (வயது 26) - இராமநாதபுரம் மாவட்டம்
20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம்
21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம்
22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம்
23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம்
இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்? என்று வினவியுள்ளார்.
- தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
- உண்மையான பக்தர்கள் தி.மு.க. ஆட்சியை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், கே.என் நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்வீரராக திகழ்கிறார்.
* அடியார்க்கு அடியார் போல் உழைத்து கொண்டிருக்கும் சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது.
* முதலமைச்சராக நான் அதிக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டது இந்து சமய அறநிலையத்துறையில் தான்.
* இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
* அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 2,300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
* பல்வேறு கோவில்களக்கு பக்தர்கள் ஆன்மிக பயணத்திற்கு அழைத்து சென்றுள்ளோம்.
* 3,800-க்கு மேற்பட்ட திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து தி.மு.க. அரசு சாதனை படைத்துள்ளது.
* 41 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
* உண்மையான பக்தர்கள் தி.மு.க. ஆட்சியை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
* பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
* கேலிகள், விமர்சனங்களுக்கு ஒரு போதும் கவலைப்படுவதில்லை. மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன் என்றார்.
- நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
- ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பரமக்குடி–இராமநாதபுரம் இடையிலான #NH87 நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரூ.1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று முன்தினம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,065 ரூபாய்க்கும் சவரனுக்கு360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320
29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-07-2025- ஒரு கிராம் ரூ.120
30-06-2025- ஒரு கிராம் ரூ.119
29-06-2025- ஒரு கிராம் ரூ.119
28-06-2025- ஒரு கிராம் ரூ.119
27-06-2025- ஒரு கிராம் ரூ.120






