என் மலர்
சென்னை
- காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது.
- திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களாக விளங்கும் பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக பக்தர்களுடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருவதால் கோவில்களில் எப்போதும் மக்கள் கூட்டமாக இருந்து வருகிறது.
நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கவும், நீண்ட நேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) கொண்டுவர உள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும்.
முதல்கட்டமாக பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலிலும் 'பிரேக்' தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக ஆன்லைன் மூலம் தரிசன தேதி, நேரத்தை பதிவு செய்யும் பக்தர்கள் கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனை தரிசிக்க முடியும்.
இந்த 'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை விரைவு தரிசனம் செய்வதாகும். 'பிரேக்' தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.
பழனி கோவிலைப் பொறுத்தவரை, ரூ.300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது. அதே முறை இந்த 3 கோவில்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோவில்களை தொடர்ந்து ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ய வைத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது.
- இதுதான் திராவிட மாடலா? என்று குறிப்பிட்டு பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை:
அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ய வைத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. இதுதான் திராவிட மாடலா? என்று குறிப்பிட்டு பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. அர்ச்சகர் பூஜை செய்த வீடியோவில் உள்ளது டாஸ்மாக் கடை அல்ல. மேலும் அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரும் இல்லை. கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பிவருகிறார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
- கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சமையலறை உள்பட 360 சதுர அடியாகும்.
- மீதம் உள்ள 61 ஆயிரத்து 965 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
சென்னை:
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணியை தொடங்கியது. இதன்படி, தமிழகத்தில் குடிசை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கட்டி கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சமையலறை உள்பட 360 சதுர அடியாகும். ஏழைகளின் சொந்த வீடு கனவை நனவாக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 61 ஆயிரத்து 965 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்: மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1 முதல் 8வது தெரு, திருவள்ளூர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு.
சேத்பட்: பிசி ஹாஸ்டல் சாலை, நவ்ரோஜி சாலை, எம்சி நிக்கோல்ஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகர், குருசாமி சாலை, சேத்பேட் ஜகநாதபுரம், மணகலாபுரம், பள்ளி சாலை, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர் கோட்டம் உயர் சாலை, நுங்கம்பாக்கம் உயர் சாலை, ஸ்டெர்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் 1வது தெரு, சிவராங்கா சாலை தெரு, அவென்யூ தெரு, பொன்னங்கிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு.
தாம்பரம்: கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், ஆர்.வி.கார்டன், எம்.ஆர்.தியேட்டர், துரைசாமி பிள்ளை தெரு, முடிச்சூர் சர்வீஸ் சாலை, மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன், காமா நகர் எம்.ஆர். வள்ளுவர் குருகுலம்.
நொளம்பூர்: எம்.சி.கே லேஅவுட், பனஞ்சோலை தெரு, எம்.ஜி.ஆர் கல்லூரி, 200 அடி சர்வீஸ் சாலை.
கொட்டிவாக்கம்: பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21வது தெரு, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1 முதல் 3வது தெரு, லட்சுமிவதனா தெரு, செந்தாமரைக்கண்ணன் சாலை, புதிய காலனி 1 முதல் 4வது தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு.
ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்தூரபுரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, ஆட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், சிவராமன் நகர், வசந்தம் நகர்.
- மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் இந்த மிரட்டல் புரளி என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
- சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.
- தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
- தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.
7 பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 1 பழங்குடியின உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தி ரூ.38.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொலைதூர மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு மாணவர்கள் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர்கல்வியை தொடர்ந்து பயின்றிட அரசு தொடர்முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தனி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில், மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்துதல் தொடர்பாக விரிவான கருத்துருவினை அனுப்பியிருந்தார்.
-அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று 11-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணாக்கர் தங்களது இருப்பிடத்திற்கு அருகே மேல்நிலைக் கல்வி பயிலவும், இடைநிற்றலைக் குறைத்து, உயர்கல்வி சேர்க்கை வீதத்தினை அதிகரித்திடும் பொருட்டும்.
அருகாமையில் உள்ள பின்வரும் 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.
63 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் 7 கணினி பயிற்றுநர் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தோற்றுவித்தும் இதற்கான மொத்த செலவினம் ரூ.38,98,61486/- (ரூபாய் முப்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று எட்டு இலட்சத்து அறுபத்தோராயிரத்து நானூற்று எண்பத்தாறு) மதிப்பிலான செலவினத்தில், கட்டுமானப் பணிகளை தாட்கோ மூலம் செயல்படுத்தவும். அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு கோரியிருந்தார்.
வ.எண்.1 முதல் 7 வரை உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் / வ.எண். 8 - நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல்,
3. பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மேலே பத்தி 2ல் அட்டவணையில் உள்ள 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மாவட்டம் மன்னூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 31.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
- ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படும்.
அதன் விவரம் பின்வருமாறு:-
அரசு கல்வியியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்.) மாணாக்கர் சேர்க்கை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இன்றுடன் கால அவகாசம் முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது. 31.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 04.08.2025 முதல் 09.08.2025-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 13.08.2025 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.
ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.
மாணாக்கர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது!
- பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களில் ஒருசில 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்கிற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் 7.7.2025 அன்று துவங்கினேன்.
மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது! ஆனால், மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை!
ஸ்டாலின் மாடல் அரசின் அக்கிரமங்களினாலும், அட்டூழியங்களினாலும், செயலற்ற தன்மையாலும் நம் மக்கள், எதிர்பார்த்ததைவிட அதிகமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள் என்பதை நான் பார்த்து மனம் நொந்தேன்!
திரு. ஸ்டாலின் அவர்களே! உங்களின் காட்டாட்சியும், கொடுங்கோல் ஆட்சி பற்றியும் எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர், பஞ்சாலை உரிமையாளர்கள் என்று எண்ணற்றோரை எனது எழுச்சிப் பயணத்தில் சந்தித்தேன்.
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது. மன வேதனை அடைந்தேன்.
மின் கட்டண உயர்வால் பொதுமக்களும், மின் நிலைக் கட்டண உயர்வால் தொழில் நிறுவனத்தினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
வரி உயர்வாலும், விளைச்சலுக்கு சரியான விலை இல்லாமலும், வரிச் சுமையாலும் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லி, இதற்கெல்லாம் முடிவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் வரவேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்துக் கவலைகளை தெரிவித்தனர்!
உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் ஸ்டாலின் அவர்களே! தமிழகத்தில் இப்போது இருக்கும் இருண்ட காலத்தை மாற்றி, இழந்த பொற்காலத்தை நான் மீட்டுத் தருவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்.
திமுக-வின் விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை நானறிவேன்; ஏன் இந்த நாடே அறியும்!
மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 50 மாதங்களில், தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியதுதான்.
திமுக ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவோம் எனச் சொன்னீர்களே… செய்தீர்களா?
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மேலும் 2 லட்சம் பணியிடங்கள் என்று மொத்தம் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்.
அரசுத் துறைகளில் கடந்த 50 மாத காலத்தில் உங்களின் விடியா அரசு உருவாக்கிய வேலைவாய்ப்புகள் வெறும் ஐம்பதாயிரத்தைக் கூட தாண்டவில்லை என்பதுதானே உண்மை. (அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் காலிப் பணியிடங்களே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது). எத்தனை நாளைக்குத்தான் இந்த உண்மையை மறைப்பீர்கள்.
அரசாங்க ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவேன் எனச் சொன்னீர்களே? கொண்டுவந்தீர்களா?
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய தேதியில் சம்பளம் தரவில்லையே.
சில கல்விக் கூடங்களில் அரங்கேறிய பாலியல் வன்முறைகளை நினைத்து மக்கள் மன வேதனையில் இருக்கிறார்களே....
ஒடுக்கப்பட்டோரும், பாட்டாளி வர்க்கமும் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாய் இல்லை.
முதியோர் கொலைகள், திட்டமிட்ட தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டே இருக்கின்றதே.
இதுபற்றியெல்லாம், உங்களையும், உங்கள் ஆட்சியையும் நோக்கி சாமானிய மக்கள் தினமும் கேள்வி எழுப்புவதும், உங்களிடம் பதில் இல்லாததை நினைத்து உங்களுக்கு
ஜூரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே!
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்; மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப் பொருள் புழக்கம்; கள்ளச் சாராய மரணங்கள்; 25-க்கும் அதிகமான காவல் நிலைய மரணங்கள்; கனிம வளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர்கள் விபத்தில் மரணிப்பது; கல்குவாரிகளை திமுக-வினர்களே விதிகளை மீறி ஏலத்தில் எடுத்து சுரண்டுவது; வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம்சாட்டியது; போலீஸ் விசாரணயில் உயிரிழந்தவரின் தாயாரிடம் கைபேசி மூலம் பேசும்போது, பொறுப்பற்றத்தனமாக ளுடீசுசுலு எனச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழித்தது என்று, தமிழக மக்கள் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் வஞ்சினம் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து தான் உங்களுக்கு ஜூரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே...!
வெற்று விளம்பரங்கள் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆரம்பிக்கபபட்ட திட்டங்களுக்கு புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது. அதைத் தான் எனது இந்த எழுச்சிப் பயணத்தில் மக்கள் என்னிடம் கோரிக்கையாக வைத்தார்கள்.
நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது இதை உணர்வீர்கள். மக்கள் கோபத்தை நேரில் எதிர்கொள்ள இயலாமல் பரிதவிப்பதை யாராலும் மாற்ற முடியாது. வாக்கு செலுத்தி உங்களை முதலமைச்சராக்கிய மக்களின் கேள்விக்கு உங்கள் பதில்தான் என்ன? அந்த பதில் தெரியாமல் தான் உங்களுக்கு ஜூரம் வந்துவிட்டது போலும்!
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கு, கடந்த இரண்டு நாட்கள் நான் சென்ற பிரச்சார சுற்றுப் பயணத்தின்போது
திரண்டு வந்த மக்களின் எழுச்சியும், அவர்கள் கொடுத்திட்ட பேராதரவுமே சாட்சி!
மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
- அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தம்பியாக நான் அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அதிமுக பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டு விட கூடாது. பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.
அதிமுக தனது செல்வாக்கை இழந்து விட கூடாது என்பதை தோழமையுடன் சுட்டி காட்டுகிறேன்.
பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ்.
அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.
அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.
திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி ஆட்சி முழுக்கத்தை வைத்துள்ளனர்.
சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம், தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை.
இந்து சமய அறவிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
- தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார்.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் கடந்த 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி விசாரணை கேட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. சார்பில் சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 13-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது.
இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள்.
- ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே.
கோவையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவில் வருமானத்தில் தி.மு.க. அரசு கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.






