என் மலர்
சென்னை
- திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது.
- அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு பணக்காரர்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது துரோகம்.
பா.ம.க. தலைவர் அன்புணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய தமிழக அரசு, அதை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த முறைகேடு தொடரபாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மதுரை மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில்தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது.
திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு, பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகரக் காவல்துறை விசாரித்தால் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
- பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.
கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.
கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
- கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ் பாடத்திற்கு 216 பேர், ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை 1-57, உடற்கல்வி இயக்குனர் நிலை 1-102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 12-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் உள்ள குறைகளை களைவதற்கு ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தேர்வு நடைபெறும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் tnbgrievanee@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 14-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் ஜெயலலிதா காலத்திலேயே கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள்.
- ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் இயக்கத்தை சீரமைக்க, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கிராம கமிட்டி முதன்மை பயிற்சியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 12,525 பஞ்சாயத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
கிராம கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு 72 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் முழுமை பெறும். அனைத்து மாவட்டங்களிலும் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை முழுமையாக செய்து வருகிறோம்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூடுதல் தொகுதிகளை கேட்டது அவரது சொந்த கருத்து.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமையை நாங்கள் மேலிடத்தில் தெரிவிப்போம். கூடுதல் தொகுதி பெறுவது, ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். அவர்களின் அனுமதி பெற்று தான் நான் எதுவும் சொல்ல முடியும். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பேசும்போது தொண்டர்களின் மனசாட்சியாக நான் செயல்படுவேன்.
தமிழகத்தில் ஜெயலலிதா காலத்திலேயே கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள். அதனை தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.
அ.தி.மு.க. திராவிட கட்சி அல்ல. அந்த காலம் மலையேறி போச்சு.. ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகால போலீஸ் காவலில் மரணம் அடைந்தவர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திப்பதாக வரும் செய்திகளை பார்த்தால் அவர் அரசியல் செய்வதாக தெரிகிறது. அவரது அரசியல் வேறு, எங்கள் அரசியல் வேறு.
பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற குடியாத்தத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் 13-ந்தேதி சென்னையில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதை சிறப்பாக நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்க பாலு, திருநாவுக்கரசர், மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அசன்மவுலானா, துரை சந்திரசேகர், பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், மற்றும் வழக்கறிஞர் நரேஷ் குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
- சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:
எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் ரெயிலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு- கடற்கரை இடையே புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
- திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, 'ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54 ஆயிரத்து 310 புதிய உறுப்பினர்களையும் 30 ஆயிரத்து 975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதல் இடத்தில் முந்தி இருக்கிறது.
திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம்.
- மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
சென்னை :
மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார். மேலுர் அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?
படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா?
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது.
தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
- திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர்.
- 'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்யுமோ, அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியே!" என்ற தத்துவம் தமிழ் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலையை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மடங்கு சொத்துவரி உயர்வுடன் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்துவரி உயர்வு, பலமடங்கு குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம், தொழில்வரி உயர்வுடன் குப்பை வரியையும் பலமடங்கு உயர்த்தி உள்ளாட்சியின் நிதி நிலைமையை உயர்த்திய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு, வாங்கக்கூடிய வரிகளுக்கு ஏற்ப சாலை வசதியையோ, குடிநீர் வசதியையோ, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் எதையும் மேம்படுத்தவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முன்னாள் உதவி கமிஷனர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதன் அடிப்படையில்தான் நாங்கள் சொத்து வரியைக் குறைத்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எப்போதும் குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற முயலும் மு.க.ஸ்டாலின், குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக மண்டலக் குழுத் தலைவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தவிர, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனாலேயே குறிப்பிடப்பட்ட திமுக-வினர் வசம் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், திமுக மேயர் மற்றும் தலைவர்களாக உள்ளவர்களை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளோடு, திமுக-வின் கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துவதும் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்குக் காரணம், உள்ளாட்சி பதவிகள் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, 'கமிஷன்', 'கலக்ஷன்', 'கரப்ஷன்' தங்கு தடையின்றி நடப்பதுதான்.
உள்ளாட்சி மன்றங்கள் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும், இவை 'உடன்பிறப்புகளின் குடும்ப ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையோ' என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய ஊழல்கள் மீண்டும் மீண்டும் எழுவது மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. இந்நிலையில், விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அடிக்கடி பொதுவெளியில் பேசி வரும் 'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏன் இவர்களை தேர்ந்தெடுத்தோம் என்று தங்களைத் தாங்களே தமிழக மக்கள் நொந்து கொண்டிருக்கின்றனர். தமிழக நலனை கவனிக்காமல், குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் விடியா திமுக ஸ்டாலின் அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது. உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டவை, குடும்ப ஆதிக்கத்திற்கு அல்ல என்பதை தமிழக மக்கள் வரும் 2026 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தத் தயாராகிவிட்டார்கள் என்பதை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் மக்கள் கூட்டம் எடுத்துரைக்கிறது. மேலும், 2026ல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.72ஆயிரத்துக்கு விற்பனையானது.
- கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்தும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.72ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,020 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,00
08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080
06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-07-2025- ஒரு கிராம் ரூ.120
08-07-2025- ஒரு கிராம் ரூ.120
07-07-2025- ஒரு கிராம் ரூ.120
06-07-2025- ஒரு கிராம் ரூ.120
05-07-2025- ஒரு கிராம் ரூ.120
- 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய் அவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
- விசாரணையின் போது காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மடப்புரம் அஜித்குமார் கொலையை கண்டித்து வருகிற ஞாயிற்றுக்கிழமை த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
மேலும், காவல் நிலையங்களில் மரணம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய் அவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
- காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை:
புளியந்தோப்பில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா? என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,
தி.மு.க. ஆட்சியில் 46 கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். கல்வி பணியை தி.மு.க. ஆட்சி செம்மையாக நடத்தி கொண்டிருக்கிறது. கல்விக்கு சரஸ்வதி என்று குறிப்பிடுகிறோம். பசிப்பிணி போக்குதலும், கல்வி அளித்தலும் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் ஆகும்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் கல்லூரிகளால் அதிகம் பயன்பெறுகின்றனர். 19 கோவில்களில் மருத்துவமனைகளையும் தொடங்கியுள்ளோம். கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சங்கிகள் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்விநிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பழனி ஆண்டவர் கல்லூரியில் 2017-ம் ஆண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி விஷ விதைகளை பரப்பி வருகிறார் என்றார்.






