என் மலர்
நீங்கள் தேடியது "break darshan"
- காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது.
- திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களாக விளங்கும் பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக பக்தர்களுடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருவதால் கோவில்களில் எப்போதும் மக்கள் கூட்டமாக இருந்து வருகிறது.
நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கவும், நீண்ட நேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) கொண்டுவர உள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும்.
முதல்கட்டமாக பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலிலும் 'பிரேக்' தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக ஆன்லைன் மூலம் தரிசன தேதி, நேரத்தை பதிவு செய்யும் பக்தர்கள் கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனை தரிசிக்க முடியும்.
இந்த 'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை விரைவு தரிசனம் செய்வதாகும். 'பிரேக்' தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.
பழனி கோவிலைப் பொறுத்தவரை, ரூ.300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது. அதே முறை இந்த 3 கோவில்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோவில்களை தொடர்ந்து ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
- கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி., பிரேக் தரிசன திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் பிரபலமாக உள்ள கோவில்களில் விஐபி பிரேக் தரிசனத்துக்காக ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும். இறைவன் முன்பாக ஏழை, பணக்காரன் என்று பாகுபடுத்தி கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.
இது பக்தா்களிடம் பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தும் செயலாகும். அதிலும் காா்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் தரிசனக் கட்டணமும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் ஒரு கால வழிபாடு இல்லாமல் பல ஆயிரம் கோயில்கள் மூடிக்கிடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாமர பக்தா்களின் இறைபக்தியை கேவலப்படுத்தும் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும். அதே வேளையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு கோயில்களின் முன்பாகவும் பக்தா்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






