என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவலாளி அஜித்குமார் மரணம்- த.வெ.க. சார்பில் கண்டன போராட்டம் அறிவிப்பு
- சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
- தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார்.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் கடந்த 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி விசாரணை கேட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. சார்பில் சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 13-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது.
இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






