என் மலர்tooltip icon

    சென்னை

    • 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    மேலும், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ரெட்ஹில்ஸ்: புதுநகர் 3வது - 5வது தெரு, நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேகக்பர் அவென்யூ, பாலாஜி கார்டன், பாடியநல்லூர், கண்ணபாளையம், சேந்திரம்பாக்கம், சீரங்காவூர், பெருங்காவலூர், கும்மனூர், ஆர்ஜேஎன் காலனி, கோமதியம்மன் நகர், பாலவயல், மணீஷ் நகர், ஜெயதுர்கா நகர், ஆரூனுல்சா சிட்டி, விஷ்ணு நகர், மகராஜ் நகர், கரிகலா நகர்.

    மாங்காடு: டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொலுமாணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர் மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர்.

    ஐடி காரிடார்: பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, எம்சிஎன் நகர், எம்சிஎன் நகர் விரிவு, ஸ்ரீபுரம் சாலை.

    தரமணி: கந்தன்சாவடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, வால்மீகி தெரு, முல்லை தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, ராஜீவ் தெரு, அன்னை தெரசா தெரு, கணபதி தெரு, இந்திரா காந்தி தெரு, அண்ணா தெரு, கண்ணதாசன் தெரு, சிதம்பரனார் தெரு, மருதம் தெரு, ஜான்சிராணி தெரு, அம்பேத்கர் தெரு, வியாசர் தெரு, கொடி காத்த குமரன் தெரு, கட்டபொம்மன் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு, அவ்வையார் தெரு, கரிகாலன் தெரு, சேரன் தெரு.

    அடையாறு: சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் 1வது, 2வது, 15வது குறுக்குத் தெரு.

    திருவான்மியூர்: எல்பி ரோடு, காமராஜ் நகர், அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர், டிஎன்எச்பி, மாளவியா அவென்யூ, மருதீஸ்வரர் நகர், எம்ஜி ரோடு.

    சேலையூர்: மாடம்பாக்கம் மெயின் ரோடு, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மெண்ட், திருமகள் நகர், பேங்க் காலனி, புவனேஸ்வரி நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர், ராஜாஜி நகர்.

    பெருங்களத்தூர்: பாரதி நகர் 1 முதல் 8வது தெரு, காந்தி நகர், சாரங்கா அவென்யூ, சடகோபன் நகர், குட் வில் நகர்.

    செம்பாக்கம்: சரவணா நகர், விஜிபி சீனிவாச நகர், சத்ய சாய் நகர், கவுசிக் அவென்யூ, காந்தி நகர், சரஸ்வதி நகர்.

    • அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.
    • திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும்.

    பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.

    அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 15-ஆம் நாளில் கர்நாடக அரசு அமைச்சரவையைக் கூட்டி உள் இட ஒதுக்கீடு வழங்க தீர்மானித்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதன் கடைசி நாளான, நாளை மறுநாள் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் ஒது குறித்த சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதாவது கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 163 நாள்களில் அது சாத்தியமாகவுள்ளது. இது ஒரு சமூகநீதிச் சாதனை என்பதில் ஐயமில்லை.

    ஆனால், தமிழ்நாட்டிலும் தான் ஒன்றுக்கும் உதவாத அரசும், அதனால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இருக்கிறதே. அவற்றை நினைக்க நினைக்க கோபம் தான் கொந்தளிக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் 31.03.20222-ஆம் நாள் தீர்ப்பளித்து இன்றுடன் 1239 நாள்கள் ஆகின்றன. அரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 952 நாள்கள் ஆகின்றன. ஆனால் அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.

    சமூகநீதியை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவரைப் போல நாடகங்களை அரங்கேற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்வதெல்லாம் சமூகநீதியை குழிதோண்டி புதைப்பது தான். வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும்.
    • கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதைதொடர்ந்து, கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசa மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மனுவில்," அதிக வன்முறை காட்சிகள் இருந்த கேஜிஎப் மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதிகளவிலான சண்டை காட்சிகள் உள்ளதால், கூலி படத்துக்கு A சான்றதழ் வழங்கப்பட்டதாக சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • விசாரணை, தீர்ப்பு என எதுவுமே இல்லாமல் 30 நாட்கள் கைதாகி இருந்தாலே பதவி நீக்கம் என்பது கருப்பு சட்டம்.
    • எதிரணியை அமைதியாக்குதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும்.

    முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்று கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்த 130வது அரசமைப்புத் திருத்த மசோதா சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு மசோதா.

    இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி, அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளத்தையும் சீர்குலைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

    விசாரணை, தீர்ப்பு என எதுவுமே இல்லாமல் 30 நாட்கள் கைதாகி இருந்தாலே பதவி நீக்கம் என்பது கருப்பு சட்டம். வாக்குத்திருட்டு, எதிரணியை அமைதியாக்குதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும்.

    போட்டியாளர்களை கைது செய்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்குவதைத்தான் வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் முதலில் செய்வார்கள். இம்மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.
    • அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருவதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம். தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.

    அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை. தமிழக அரசு தேர்தல் நேர வாக்குறுதியையும், அரசுப் போகுவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களின் பணிக்காலத்தையும், உழைப்பையும், போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள்.
    • தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புலம்பெயர் தொழிலாளர்கள் வருகைக்கான காரணம், எங்கு உள்ளனர், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை, என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இந்நிலையில் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மகன்கள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செல்வம், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்!
    • ஒண்டிவீரனின் நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.

    சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளனர்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கொடுங்கோல் காலனித்துவ ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி மகத்தான தியாகம் செய்த அச்சமற்ற தளபதி, தொலைநோக்குத் தலைவர் மற்றும் வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது ஈடு இணையற்ற துணிச்சலும் தியாகமும் நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தன. அவரது நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்தபாரதம்2047- ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!

    சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
    • பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அம்மாவும் - அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்!

    வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.

    மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் - இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் - கடும் அரசியல் சூழல்கள் - தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா!

    அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா!

    பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.

    இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்!

    அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை.
    • கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.

    இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதனையடுத்து 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் செய்தனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

    தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    • தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியின் அடிப்படையில் உருவாக்கித் தருவது தான்.
    • இப்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு 1020 ஓட்டுனர்களும், 1172 நடத்துனர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே மாநகரப் போக்குவர்த்துக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. விரைவில் மேலும் 505 மின்சாரப் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படவுள்ளன. இவை அனைத்துமே ''சென்னை மாநகர கூட்டாண்மை: நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம்'' என்ற தலைப்பிலான ஒப்பந்தத்தின்படி தனியாரால், தனியார் நிறுவனங்களின் ஓட்டுனர்கள் மட்டும் நடத்துனர்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளன.

    மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே 875 ஓட்டுனர்கள், 625 நடத்துனர்கள் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 2192 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்படும் போது, குத்தகை முறை பணியாளர்களின் எண்ணிக்கை 3692 ஆக அதிகரிக்கும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள சுமார் 16 ஆயிரம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் இது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும். மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும், மனிதவளமும் பெருமளவில் தனியார் மயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பெயர் மட்டும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் என்று இருப்பது, "மாப்பிள்ளை அவர் தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற நகைச்சுவையைத் தான் நினைவுபடுத்துகிறது.

    மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்ல... தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியின் அடிப்படையில் உருவாக்கித் தருவது தான்.

    போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நேரடியாக ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு கவுரமான ஊதியம் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்களின் உழைப்பும் சுரண்டப்படும்.

    போக்குவரத்துக் கழகங்களுக்கு குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதன் மூலம் சமூகநீதியை குழி தோண்டி புதைத்தல், உழைப்புச் சுரண்டலை ஊக்குவித்தல், அரசின் வளங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் ஆகிய முப்பெரும் பாவங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    ×