என் மலர்
சென்னை
- ரிதன்யா தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
- வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
- போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.
- ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
- ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.க. ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.
- தற்போது தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று இரண்டாவது முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. வார தொடக்கநாளான இன்று காலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10, 060-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வழக்கம்போல் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது நடுத்தர மக்கள் மற்றும் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள்.
- உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்ததுடன் அங்குள்ள தமிழர்களை சந்தித்தும் கலந்துரையாடினார். இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக இன்று காலை 8.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் திரளாக வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
அதன் பிறகு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருவார காலமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன்.
இந்த பயணத்தை பொறுத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்து இருக்கிறது. மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஏற்கனவே இருக்கக் கூடிய 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி போகாமல், நம்முடைய மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.
எனக்கு முன்னாடியே நான் புறப்படுவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்னாடியே என்னுடைய ஒட்டு மொத்த பயணத்தை முறைப்படுத்துவதற்காக மிக சிறப்பாக ஒருங்கிணைத்து, அந்த பணியை வெற்றிக்கரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொழில்துறை அமைச்சரை பொறுத்தவரை, ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சராக ராஜா இந்த பயணத்தின் மூலமாக நிரூபித்து உள்ளார்.
கடந்த 4½ ஆண்டு காலத்தில் மேற்கொண்டிருக்கக் கூடிய எனது பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த வெளிநாட்டு பயணத்தில்தான், மிக அதிக அளவிலான, முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இது ரொம்ப வெற்றிகரமான பயணம். பெருமையான பயணமாகவும் இது அமைந்தது.
அது ஏன் என்றால், உங்களுக்கே தெரியும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகின் முதன்மையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்தது தான் அந்த பெருமைக்கு காரணம்.
அதுமட்டுமல்ல சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கையும், நாம் கடந்து வந்த பாதையையும் இனி அடைய வேண்டிய இலக்கையும் விளக்கமாக நான் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன்.
அதோட அயலக தமிழர்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசியது, சோயாஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் திராவிட மாடல் பற்றி பேசியது, லண்டனில் இருக்கக் கூடிய பொதுவுடைமை தத்துவ மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடம், சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை, ஜி.யு.போப் நினைவிடம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, பல பெருமைகளோடு நான் திரும்பி இருக்கிறேன்.
முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சராக மட்டுமல்ல, பெரியாரின் பேரனாக, திராவிட இயக்கத்தை சார்ந்த தலைவராக, சுயமரியாதை உள்ள ஒரு தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் எனக்கு தனிப்பட்ட வகையிலும் மறக்க முடியாத பயணமாக அமைந்து உள்ளது.
சிலரால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் எதுக்கு இந்த வெளிநாட்டு பயணம். இங்கிருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு புலம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில், நிறைய ஜெர்மன் கம்பெனி வந்திருந்தார்கள்.
அப்போது நம் தமிழ்நாட்டை பற்றி எடுத்து சொன்னதும் பல முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் இவ்வளவு கட்டமைப்பு இருக்கிறது என்று இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் தெரியுது. இதுக்கு முன்னாடி வேறு ஒரு மாநிலம்தான் தங்களது பொட்டன்ஷியலை பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இனி நிச்சயம் தமிழ்நாட்டை நோக்கி நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.
அடுத்து ஜெர்மனியில் என்.ஆர்.டபிள்யு. மினிஸ்டர் பிரசிடெண்ட் ஹன்ரிக் ஹிஸ்ட் அவர்களை சந்தித்து பேசினேன். அவரும் அதையேதான் சொன்னார்.
இப்படியான தொடர்புகளை ஏற்படுத்தவும், பார்ட்னர்ஷிப் உருவாக்கவும்தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சரான நானே நேரில் போனேன்.
ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர் இன்னொரு நாட்டோட மாநிலத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவரை சந்திக்கும் போது பிசினசை தாண்டி இந்த உறவு வலிமையாகிறது. அதுதான் முக்கியம். அப்படித்தான் ஹென்றிக் ஹிஸ்ட், இங்கிலாந்து அமைச்சர் கேசரின் ஆகியோருடைய சந்திப்பு இருந்தது.
அதே போல்தான் நீங்கள் கேட்கிற அடுத்த கேள்விக்கான பதில் என்னவென்றால், ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இருந்தாலும், அவங்க புதிய திட்டங்களை இங்கேதான் தொடங்க வேண்டும். விரிவுப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.
அவர்களுடைய புதிய முதலீடுகளை தமிழ்நாட்டிலேயே மேற்கொள்வதாக உறுதி செய்ய வேண்டிய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிற போது தான் அதை அவர்கள் உறுதி செய்தார்கள். அதுக்காக இந்த மாதிரி பயணங்கள் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு கொண்டிருக்கக் கூடிய மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் இதைப் பற்றி முதலமைச்சராக இருக்கக் கூடிய நானே எடுத்துச் சொல்கிறேன்.
இப்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகளும், நிறுவனங்களும் இந்த சந்திப்பால் நிச்சயம் தமிழ்நாட்டுக்கு வரும் என்று நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் இன்று 8-ந்தேதி நான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து இன்னும் 2 நாளில் 11-ந்தேதி ஓசூருக்கு போகிறேன். அங்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, ஆட்டமெட்டல்லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்து ரூ.1100 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்.
அதே மாதிரி ஏற்கனவே தூத்துக்குடியில் நடத்தியது மாதிரி ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த போகிறோம். அங்கேயும் பல ஆயிரம் கோடி முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களது வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது. இது தொடரும், தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்ததும் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் வழிநெடுக கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். கத்திப்பாரா ரவுண்டானா வரை நிர்வாகிகள் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
- அ.தி.மு.க. விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் போகும் நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள்.
- எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்.
சென்னை:
சைதாப்பேட்டையில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28.75 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கல்வியும், சுகாதாரமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று முதல்வர் கூறுவார்.
கலைஞர் ஆட்சியில் சுகாதாரத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டங்கள்தான் இன்று சென்னையை இந்தியாவின் மெடிக்கல் கேப்பிட்டல் என்று சொல்லும் அளவிற்கு சொல்ல வைத்துள்ளது.
மக்களுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி செல்ல வேண்டும் என்பதற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பல்வேறு திசைகளில் இருந்து நம்முடைய அரசுக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்து வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐ.நா. சபையின் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. சுகாதாரத்துறையில் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் உள்ளார் மக்களை சந்திக்கிறார். 10 நாள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல் என்னெல்லாம் தடங்கள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் அ.தி.மு.க.வை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும். எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் கால்வாயை ரூ. 30கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.
- தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என மல்லை சத்யா கூறியுள்ளார்.
- தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார்.
சென்னை:
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என கடந்த 17-ந்தேதி அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன்.
அந்த அறிவிப்பை, கடந்த 19-ந்தேதி பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, கடந்த 24-ந்தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், கடந்த 27-ந்தேதி பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப்பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 6-ந்தேதி அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் படி துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்நிலையில் என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் எனவும் மல்லை சத்யா கூறினார்.
- மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
- மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மல்லை சத்யா நடத்தினார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.
இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முன்னதாக ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டதாக வைகோ அறிவித்துள்ளார்.
- கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920
04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360
03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
06-09-2025- ஒரு கிராம் ரூ.138
05-09-2025- ஒரு கிராம் ரூ.136
04-09-2025- ஒரு கிராம் ரூ.137
03-09-2025- ஒரு கிராம் ரூ.137
- பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
- தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
சென்னை:
ஜெர்மனி, இங்கிலாந்து பயணங்களை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாயகம் திரும்பினார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி இருக்கிறேன். வெற்றிப்பயணத்தால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன.
* இதுவரை சென்ற பயணங்களிலேயே முத்தாய்ப்பான பயணம் இது.
* பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
* தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
* முதலீடுகளை ஈர்ப்பதற்கான எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூ.7,020 கோடி முதலீடு ஈர்த்து 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 7 நிறுவனங்களில் ரூ.8,496 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 2,293 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.






