என் மலர்tooltip icon

    சென்னை

    • சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 3 மணி நேரம் தாமதமாக, காலை 8.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
    • விமானங்கள் தாமதத்திற்கான காரணம் குறித்து, பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 1½ மணிநேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2.05 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இலங்கை கொழும்பு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா பயணிகள் விமானம், சுமார் 1½ மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 2.25 மணிக்கு, புறப்பட்டு சென்றது.

    சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 3 மணி நேரம் தாமதமாக, காலை 8.40 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சுமார் 2 மணிநேரம் தாமதமாக, நள்ளிரவு 12.10 மணிக்கு, சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள், பல மணி நேரம், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து, கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இந்த விமானங்கள் தாமதத்திற்கான காரணம் குறித்து, பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. ஆத்திரம் அடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் ஏர்-இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • மக்கள்நலப் பணிகளை மேற்கொள்வதில் தி.மு.க. அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
    • கிராமங்களில் செயல்படாத சண்டி மாடுகளை ஒதுக்கி வைப்பதைப் போல திராவிட மாடல் அரசுக்கும் வரும் தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் கூட தி.மு.க. அரசு செயல்படுத்தாமல் குறட்டை விட்டு உறங்கும்; பாட்டாளி மக்கள் கட்சி தட்டி எழுப்பினால் தான் விழித்துக் கொண்டு செயல்பட முயலும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள்நலப் பணிகளை மேற்கொள்வதில் தி.மு.க. அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்ததைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கான அனுமதியை திரும்பப் பெறும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தப்படும் என்று அன்று மாலையே தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன்பின் 15 நாள்களாகியும் அனுமதி ரத்து செய்யப்படாததை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் செப்டம்பர் 7-ஆம் தேதி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். அதன்பிறகு தான் கடந்த 10-ஆம் தேதி ஹைட்ரோ கிணறுகள் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

    அதேபோல், கடந்த மார்ச் 15-ஆம் நாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், "முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில்நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாதது ஏன்? என்று கடந்த 10-ஆம் தேதி பண்ருட்டியில் நடைபெற்ற முந்திரி விவசாயிகளுடனான சந்திப்பின் போது நான் வினா எழுப்பியிருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு முந்திரி வாரியம் அமைப்பதற்கான அரசாணையை நேற்று பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அறிவிப்புகளை மட்டும் தான் வெளியிடும். அத்துடன் கடமை முடிந்து விட்டதாகக் கருதி கும்பகர்ணன் உறக்கத்திற்கு சென்று விடும். அதன்பின் அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டி தட்டி எழுப்பினால் தான் விழித்துக் கொண்டு செயல்படும். இதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

    "சண்டி மாடு தானாக ஓடாது... தார்க்குச்சியால் குத்தினால் தான் ஓடும்" என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். அதைப் போலத் தான் செயல்படாத சண்டி மாடாக திராவிட மாடல் அரசு இருக்கிறது; அதை செயல்பட வைக்கும் தார்க்குச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது. கிராமங்களில் செயல்படாத சண்டி மாடுகளை ஒதுக்கி வைப்பதைப் போல திராவிட மாடல் அரசுக்கும் வரும் தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள். அதன்பின் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில் தமிழ்நாடு மறுமலர்ச்சி பெறும்; மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம்.
    • கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

    கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல்.

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் – பெரியாரின் இலட்சியங்களை வென்றெடுத்திட அண்ணாவால் நம் இதயத்துடிப்பான திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் - இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்.

    கொள்கை முழக்கமிடும் கருத்தரங்குகள் – பட்டிமன்றங்கள் - கவியரங்குகள்-பொதுக்கூட்டம் என மூன்று நாள் திருவிழாவாக முப்பெரும் விழாவை முன்னெடுத்து, பெரியார் – அண்ணா – பாவேந்தர் - கலைஞர் பெயர்களில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் வழக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார். அப்போதைய முப்பெரும் விழாக்களின் போது, இளைஞரணிச் செயலாளராக வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன்தான், உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நம் கழகத்தின் தலைமை நிலையமாக - உடன்பிறப்புகளின் தலைமைச் செயலகமாகத் திகழும் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவின்போதுதான்.

    சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990-ஆம் ஆண்டு செப்டம்பரில் முப்பெரும் விழாவுடன் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகியவற்றையும் இணைத்து ஐம்பெரும் விழாவாக நடத்தியதும், தேசிய முன்னணியின் தலைவர்கள் மேடையிலிருந்து பார்வையிட, சென்னை அண்ணாசாலை குலுங்கிட இளைஞரணியின் பேரணியை வழிநடத்தியதும் இன்னமும் என் மனதில் நிழலாடுகின்றன.

    முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. அரிமா நோக்கு போல 75 ஆண்டுகாலக் கழகத்தின் வரலாற்றுத் தடத்தைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து, உன்னத இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்கான பாசறை. பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.

    நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக்கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. எதைச் செய்தாலும் எல்லாரும் அதிசயிக்கும் வகையில் பிரம்மாண்டமாகவும், 'இப்படியும் செய்ய முடியுமா?' என்ற நேர்த்தியுடனும், 'இவரால்தான் இது முடியும்' என்று அனைவரின் பாராட்டையும் பெறும் வகையிலும் செயல்படக்கூடிய கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் - மேற்கு மண்டலக் கழகப் பொறுப்பாளர் அன்பு இளவல் செந்தில்பாலாஜி அவர்கள் இரவும் பகலும் ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். ஒவ்வொரு கட்டத்தின் முன்னேற்றத்தையும் என்னிடம் காண்பித்து, ஒப்புதலும் ஆலோசனைகளும் பெற்று நிறைவேற்றி வருகிறார்.

    செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்குக் கழகத்தின் பொதுச்செயலாளர் - மொழிப்போர்க்கள வீரர் - அண்ணாவிடமும் கலைஞரிடமும் பெற்ற நீண்ட அரசியல் அனுபவத்தால் எனக்குத் துணையாக இருக்கின்ற அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் - கழக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    இந்த இலட்சிய விழாவில் பெரியார் விருது கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் - கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் - இந்திய நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெண்ணியக் குரலாக இன எதிரிகளை நடுங்கவைக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அண்ணா விருது கழகத்தின் மூத்த முன்னோடி - தணிக்கைக்குழு உறுப்பினர் -பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் - அண்ணா காலத்திலிருந்து கழகப் பணியாற்றி வரும் சுப.சீதாராமன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. கலைஞர் விருது கழகத்தின் நூறு வயது தொண்டர் - அண்ணாநகர் தொகுதி இடைத்தேர்தலில் அன்றைய ஆளுங்கட்சியின் சதிகளை முறியடித்து வென்ற வீரர் - அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர் -சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பாவேந்தர் பாரதிதாசன் விருது கழக மூத்த முன்னோடி - தலைமைச் செயற்குழு உறுப்பினர் - மிசா காலத்தில் தலைவர் கலைஞருக்கு உறுதுணையாக நின்று கழகத்தைக் கட்டிக்காத்த அண்ணன் குளித்தலை சிவராமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து துயரத்தில் ஆழ்த்தினாலும், என்றும் நினைவில் வாழும் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படவிருக்கிறது. பேராசிரியர் விருது கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர், சட்டப்பேரவை முன்னாள் கொறடா - கழக செயல்மறவர் மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களில் ஒருவனான என் பெயரிலான மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் - எந்நாளும் கழகப் பணியைத் தொய்வின்றி ஆற்றும் முன்னாள் அமைச்சர் சகோதரர் பொங்கலூர் ந. பழனிசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு -என் அரசியல் பணிகளில் ஆலோசகராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவரும் - என்றும் நம் நெஞ்சில் வாழ்பவருமான அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றும்படி தலைமைக் கழகம் உங்களில் ஒருவனான என்னைப் பணித்துள்ளது.

    நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான். கரூரில் செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது. அதுபோலவே செப்டம்பர் 15 பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளில்,

    * ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என உறுதி ஏற்கிறோம்!

    * நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், 'பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்." என்று,

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரை, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும்.

    'ஏ..தாழ்ந்த தமிழகமே' என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்நாட்டின் நிலையை எடுத்துக்காட்டிச் சொற்பொழிவாற்றினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அதன்பின், அவரே இந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழரின் மானத்தையும் தமிழ்நாட்டின் பெருமையையும் மீட்டார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சரான நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். இடையில் ஒரு சில முறை தமிழ்நாட்டு அரசியலில் விபத்து ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்தின் வளர்ச்சி படுபாதாளத்திற்குச் சென்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அ.தி.மு.க.வின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

    அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை அவரது கொள்கை வாரிசாகத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நம் ஆட்சியின் சாதனைகள் யாவும் பெரியார் – அண்ணா -கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில் தொடர்வதை உணர்ந்தேன். திராவிடத்தை உலக நாடுகள் அறிந்துகொண்டு ஆய்வு செய்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம்.

    உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா போதித்த கட்டுப்பாட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன். இலட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா.

    இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வீர். பெரியார் – அண்ணா - கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை வன்னியர்கள் இழந்திருக்கின்றனர்.
    • 15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் 21 பாட்டாளிகளும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர். அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.

    தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசு தவறியதால் கடந்த 4 ஆண்டுகளில் 3600 எம்.பி.பி.எஸ் இடங்களையும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் வன்னிய மாணவர்கள் இழந்திருக்கின்றனர்.

    அதேபோல், நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000-க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000-க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000-க்கும் கூடுதலான இடங்களும் பறிபோயிருக்கின்றன.

    மேலும் அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளையும் வன்னியர்கள் இழந்திருக்கின்றனர். வன்னியர்களுக்கு எதிரான இவ்வளவு பெரிய சமூகநீதி துரோகத்தை செய்தது திராவிட மாடல் அரசு தான். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான்.

    15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும், தியாகங்களையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் 21 ஈகியர்களின் நினைவு நாளில், நமக்கான சமூகநீதிப் போராட்டப் பயணத்தை அவர்களின் வாழ்த்துகளுடன் தொடருவோம்.

    அத்துடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கு என்று புதிய உச்சத்தில் விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு கிராம் ரூ.142

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    • மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் பேச வாய்ப்பு உள்ளது.

    திருச்சியில் பேசும்போது அந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அவர் பட்டியலிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி.
    • அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான்.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து களமாடி வருகிறார்கள்.

    இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கிவிட்டார்.

    அவரது சுற்றுப்பயணத்தின் முதல் தேர்வு திருச்சி. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. 'சென்டிமென்ட்' விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பின்னர் தனது ஆட்சியின் முக்கிய திட்டமான சத்துணவு திட்டத்தையும் திருச்சியிலேயே தொடங்கி வைத்தார். திருச்சியை 2-வது தலைநகராக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.

    இவ்வளவு ஏன்? அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான். திருச்சியில் நடத்துகிற மாநாடு உள்பட எந்த நிகழ்வாக இருந்தாலும் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார் நடிகர் விஜய்.

    இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். விஜய் பிரசாரம் செய்யப்போகும் மரக்கடை பகுதி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்திய இடம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தான் பிரசாரம் செய்தார். அந்தவகையில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் திருச்சி செல்கிறார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    • என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
    • இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது.

    இந்நிலையில், கூலி படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரம் குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரஜினி சாருக்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.

    நான் படத்தில் ஏதோ உள்ளே வந்து ஒரு சில வசனங்களை பேசிவிட்டு மறைந்ததைப்போன்று தான் உணர்ந்தேன். உண்மையான நோக்கம் படத்தில் எதுவும் இல்லை. அதன் பின்னால் எந்த யோசனையும் இல்லை. எனது கதாப்பாத்திரம் மோசமாக எழுதப்பட்டது.

    நான் இப்படத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவில்லை, எனவே இறுதி தயாரிப்பு எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியவில்லை.

    எனது கதாப்பாத்திரம் ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, மக்கள் ஏன் ஏமாற்றமடைந்தார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கூலி படத்தில் நான் நடித்தது ஒரு பெரிய தவறு. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என ஆமிர் கான் கூறியதாக நேற்று தகவல்கள் பரவியது. மேலும் அவர் கூறி அது ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியானது போல ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வெளியானது. தற்போது அது ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும். ஆமிர் கான் அப்படி எந்தவித கருத்தும் முன் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×