என் மலர்
சென்னை
- மாநில செயற்குழுகூட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்.
- இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2025-க்கு விடை கொடுப்போம், 2026-ஐ வரவேற்போம் என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும், மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. மற்றும் அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகர பகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
மாநில செயற்குழுகூட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் 11.40 மணி முதல் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்.
- நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்!
காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது...
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிட மாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம் - உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து 'முன் செல்லடா...' என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
பொருநை_தமிழர்_பெருமை என்று கூறியுள்ளார்.
- வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
- சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் நேற்று், இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.
சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.
சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்
- பராசக்தி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
- பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைப்பு.
- நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைப்பு.
நெல்லையில் திறக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில்,"பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. அனைவரும் அணிஅணியாக வருமாறு" அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-
பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சிவகளையில் கிடைத்த இரும்பு கருவிகளை அருங்காட்சியகத்தில் காணலாம்.
பொருநை ஆற்றங்கரையோரம் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலைகளை திரையில் காணும் வகையில் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழடி நமது தாய் மண், பொருநை தமிழர்களின் பெருமை என்பதை பறைசாற்றுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை.
- கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை.
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர்ர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர்.
- இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.
சென்னை:
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8 ஆயிரம் நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட நர்சுகளை வெளியேற்றி ஊரப்பாக்கத் தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று இரவு மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நர்சுகள் நடந்தே மீண்டும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அடைந்து அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.
அதையடுத்து கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர். இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.
இது குறித்து சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறும்போது, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு எங்களை மிரட்டுகிறது. பணி நிரந்தரம் செய்ய பணமில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
- தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன்.
- தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும்.
சென்னை:
சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாக அரங்கில் "தமிழ் கற்கலாம்" என்ற தலைப்பில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி பட்டறை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ பயிற்சி தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகும் நிலையில் பலரும் அதை பயன்படுத்திக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
பூ, மரம் என இருப்பது போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல நாம் அனைவரும் ஒன்று தான். யாரும் தனிப்பட்டவர்கள் கிடையாது.
நீர், மரம், பூமி என அனைத்தையும் வணங்க வேண்டும் என ரிஷிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் நம் ஒற்றுமையை பறித்து விட்டார்கள். உடலில் கை, கால் என அனைத்தும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றானவர்கள்.
வடமாநிலத்தவர்கள் தென் மாநிலத்தவர்கள் பற்றி குறைவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தினோம். அது போல் இதுவும் ஒரு புது முன்னெடுப்பு தான்.
தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன். தொடர்ந்து தமிழில் பேசுவதை கேட்டேன், செய்தித்தாள்கள் படித்தேன், இப்போது முடிந்தவரை தமிழில் பேச முயல்கிறேன். நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதன் மூலம் கற்றுக்கொள்வது சுலபமாகி விட்டது.
மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்கும். கலாச்சாரங்களை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் தொடர்ந்து தமிழ் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லுங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமோ படிக்க வைக்க உதவுகிறேன். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன அவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
- தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
சென்னை:
சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பட்டியலை பொறுத்தளவில் அதிலுள்ள சிறு பிரச்சனைகளை களைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நின்றார். அதாவது, வாக்களிக்கின்ற உரிமை இருக்கின்ற எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக் கூடாது, வாக்களிக்க தகுதி இல்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாகும்.
இந்த தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் பாகம் வாரியாக முகவர்களை நியமித்த ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். எங்கள் முகவர்கள் களத்திற்கு சென்று வாக்களிக்கின்ற உரிமையுள்ள எவரையும் விடுபடாமல் பாதுகாப்போம். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி தலைவர், வார்த்தைகளை கொட்டுகின்ற போது அந்த வார்த்தைகளை தகுதியான கருத்துக்களை கூறுகின்றதா என்று ஆராய வேண்டும்.
அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் தி.மு.க. பக்கம் இருந்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தான் திருடி பிறரை நம்பாள் என்ற பழமொழி இந்த கூற்றுக்கு உகந்ததாக இருக்கும்.
திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதோடு, 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி காட்டி தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும். இது அனைத்தையும் முருகப் பெருமான் உணர்ந்து எங்கள் முதலமைச்சரோடு கை கோர்த்து கொண்டிருக்கிறார். எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களை இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் எந்த பிரிவினைவாதத்திற்கும் இடம் தர மாட்டார் என்பது சீமானுக்கு தெரியும். தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
- அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.






