என் மலர்
சென்னை
- சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது.
- பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர்.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சி இரு பிரிவாக உள்ளது.
இதில் டாக்டர் ராமதாஸ் பக்கம் ஜி.கே.மணி, அருள் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அன்புமணி பக்கம் வெங்கடேசன், சதா சிவம், சிவகுமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதில் சட்டசபையில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முதல் வரிசையில் இருக்கிறார். அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அந்த இருக்கையில் வெங்கடேசனை அமர வைக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அன்புமணி தரப்பில் கடிதம் கொடுத்து இருந்தனர்.
இந்த விவகாரத்துக்கு இன்று சபாநாயகர் விளக்கம் கொடுத்து உள்ளார். சட்டசபையில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள் பேசி முடித்த நிலையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கேட்டு எழுந்து நின்றனர்.
சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:-
சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது. இன்று பிரதான கட்சி ஜெயித்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி 24 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகமாக இருந்தால் கட்சி அங்கீகாரத்துடன் சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.
அதைவிட கம்மியாக 8 உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் ஒரு குழுவாக, அணியாக இருப்பார்கள். இதுதான் சட்டமன்றத்தின் நடைமுறை. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும்தான் இருக்கையை எந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று பேரவை விதி சொல்கிறது.
மீதிமுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அது சபாநாயகரின் முழு விருப்பம். அதன்படி நான் வைத்திருக்கிறேனே தவிர நினைத்தவுடனே எழுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என யாரேனும் கேட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை.
பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர். இதில் இன்று நடைபெறும் விவாதத்திற்கு 2 பேர் எழுதி தந்தீர்கள். அதில் அருள், சிவகுமார் ஆகியோர் ஆகும். இதில் யாரை முதலில் கூப்பிடுவேன் என்றால் முதலில் எழுதி கொடுத்திருந்த அருளை கூப்பிடுவேன்.
நேற்று நீங்கள் என்னிடம் எதுவும் எழுதி கொடுக்காததால் உங்களை பேச அழைக்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்சி தலைமையகத்தில் எழுதி கொடுத்த தீர்மானத்தை இங்கு கொடுத்து அதை செயல்படுத்த சொன்னால் அது தவறானது.
இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
இதை கேட்ட அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் எச்சரித்தார். உங்கள் பிரச்சனைகளை சட்டசபைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதைத் தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.எ.க்கள் 3 பேரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- சென்னை உள்பட பல இடங்களில் பெய்து வரும் மழை நாளை முதல் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாளே சென்னை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இரவிலும் விட்டு விட்டு பெய்த மழை காலையிலும் நீடித்தது.
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? எப்போது தீவிரமடையும்? என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரன் விளக்கி உள்ளார்.
அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளம், தெற்கு கர்நாடக பகுதியில் நாளை (18-ந்தேதி) உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்காது. சென்னை உள்பட பல இடங்களில் பெய்து வரும் மழை நாளை முதல் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளன.
இதனால் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் பெரிய அளவில் மழை இருக்காது. தீபாவளிக்கு பிறகு, வருகிற 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும். இதனால் 23-ந்தேதியில் இருந்தே வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கான சூழல் உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 23-ந்தேதியே முழுமையாக கணிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகடலோர மாவட்டங்களில் 23-ந்தேதியில் இருந்து பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
- கிட்னி முறைகேடு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
- விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை தமிழக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை.
சென்னை :
சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 25 குழந்தைகளை கொன்ற இருமல் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.
* காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்ட நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு.
* காஞ்சிபுரத்தில் தயாரித்த இருமல் மருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* தமிழக சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்தது என ம.பி. அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
* தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியமே 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க காரணம்.
* இருமல் மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்த பின்னரும் தாமதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
* ஸ்ரீசன் பார்மா நிறுவனம் பலமுறை தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
* ஸ்ரீசன் நிறுவனம் தொடர்ந்து தவறு செய்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்காது.
* கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
* கிட்னி முறைகேடு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
* கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. யாரை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.
* தனிநபர் ஐகோர்ட் கிளையை அணுகியதால் தான் கிட்னி முறைகேடு விவகாரம் தற்போது விசாரிக்கப்படுகிறது.
* கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை தமிழக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை.
* முறையாக நெல் கொள்முதல் செய்யாததால் 30 லட்சம் மூட்டைகள் தேங்கியுள்ளன.
* பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளிடம் இருந்து போர்கால அடிப்படையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
- பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.
- ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.
ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சாதி இல்லை என்பதே தமிழனின் அடிப்படையாக இருந்தது.
* இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.
* பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது.
* வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.
* சாதி, மதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழிற்கு கொடுக்க வைத்தது திராவிட இயக்கம்.
* சமூக சீர்திருத்த ஆட்சியை நடத்தியவர் கலைஞர் கருணாநிதி.
* அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.
* அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்.
* சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வை மொழியே தமிழ்நாட்டின் கொள்கையாக இருந்தது.
* பலர் போராடிக்கிடைத்தது தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை.
* திராவிட இயக்கங்களின் முயற்சியில் தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
* சீர்திருத்த சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது.
* சாதிய பெயரில் இருந்த 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.
* உலகம் அறிவு மயமாகி வருகிறது. அது அன்புமயமாவதை தடுக்கிறது. இது நம்மை வாட்டுகிறது.
* நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மனதை வேதனைக்குள்ளாக்கி வருகின்றன.
* ஆணவ படுகொலைகளுக்கு சாதியை தாண்டியும் பல காரணங்கள் உள்ளன.
* எதன் காரணமாகவும் ஒருவர் மற்றொருவரை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.
* ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- கிராமப்புறங்களில் மின்னல் தாக்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர். பி.உதயகுமார், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.
அப்போது அவர்கள் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் கிராமப் புறங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இடிதாங்கிகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுசியதாவது:-
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி வருகிற 22-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கிராமப்புறங்களில் மின்னல் தாக்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதன்படி கிராம பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இடி தாங்கிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
- ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
- மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 25 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பான சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
* குழந்தைகள் இறப்பு நடந்து 25 நாட்களுக்கு பின்னர் தான் தமிழகத்திற்கு தகவல் கிடைத்தது.
* 25 குழந்தைகள் மரணம் தொடர்பான செய்தி கிடைத்ததும் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* தகவல் கிடைத்த 2 நாட்களில் சர்ச்சைக்குரிய மருத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
* மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
* மருந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
* சர்ச்சைக்குரிய இருமல் மருந்து (Coldrif) அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை.
* இருமல் மருந்து விவகாரத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
* இருமல் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* சர்ச்சைக்குரிய மருந்து நல்லது என மத்திய பிரதேச அரசு சான்றிதழ் அளித்துள்ளது.
* மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 25 குழந்தைகள் பலியான காரணமாக ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் உரிமம் வழங்கப்பட்டது.
* கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை.
* 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
* எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரெயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
* ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* நாள் ஒன்றிற்கு தலா 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, உடனே அனுமதி வாங்கி தாருங்கள்.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது.
* நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2,000 முதல் 3,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம்.
* நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்.
* நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன.
- டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன.
* 15 லட்சம் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்றபிறகே மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கலாம்.
* டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
* ஒவ்வொரு நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
* நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 மூட்டைகளுக்கு பதிலாக 1,000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
- சென்னை பெருநகரில் பட்டாசு விற்பனைக்கு 1088 கடைகளுக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு வெடி விபத்துக்களை எதிர்கொள்ள 8 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்களும் நாளை (18-ந் தேதி) முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை பெருநகரில் மட்டும் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு நாளை மாலை 5 மணி முதல் 22-ந் தேதி காலை 8 மணி முடிய, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தீபாவளி திருநாளின்போது, சென்னை நகரில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் தீயணைப்பு வாகனங்களுக்கு, தண்ணீர் வழங்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதிலும் 2705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்) விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகரில் பட்டாசு விற்பனைக்கு 1088 கடைகளுக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 770 கடைகளுக்கும் சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
- சபாநாயகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பவானி தொகுதி பிரச்சனையை பேச அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சர் துரைமுருகனின் பதிலை அடுத்து அடுத்த கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு சென்றார்.
சபாநாயகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வான வேல்முருகன், ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி சட்டசபையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை திமுக அரசு கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வரவேற்பேன்.
- முதலீடுகள் குவிந்து விட்டன என்று கதை, திரைக்கதை எழுதி வசனம் பேசினால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி முதலீடுகள் கண்டிப்பாக வரும்; கண்டிப்பாக வரும்; கண்டிப்பாக வரும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறியிருக்கிறார். அந்த முதலீடுகள் எப்படி வரும்? என்பதைத் தான் கூற மறுக்கிறார். அமைச்சர் கூறுவதைப் பார்க்கும் போது, நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது என்று குடுகுடுப்பைக்காரர் கூறுவதைப் போலத் தான் இருக்கிறது. டி.ஆர்.பி. இராஜா அமைச்சரைப் போல தெளிவாகக் கூற வேண்டும்; ஜோதிடம் கூறுவதைப் போல பேசிக் கொண்டிருக்கக்கூடாது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் குறித்த சிக்கலில் அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா நிமிடத்திற்கு நிமிடம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த 14-ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான எனது குற்றச்சாட்டுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாத அமைச்சர், தேவையில்லாமல் குடும்ப சிக்கலை இழுத்தார். சட்டப்பேரவையில் நேற்று இது குறித்து விளக்கமளிக்கும் போது முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும், முதலீடு செய்யப் போவதில்லை என்று கூறிய ஃபாக்ஸ்கான் நிறுவனமும் வேறு வேறு என்று கூறுகிறார். திமுகவின் ஐ.டி, அணி தலைவராக இத்தகைய தகவல்களையெல்லாம் கூறி மற்றவர்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம்; அமைச்சராக இது போல ஆதாரமற்ற தகவல்களைக் கூறக் கூடாது.
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி இராபர்ட் வூ சந்தித்து பேசினார். அப்போது தான் ரூ.15,000 கோடி முதலீடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சர் இராஜா தெரிவித்திருந்தார். அதைத் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்திருந்தது. அதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியது உண்மை; ஆனால், புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்றும் அறிக்கை மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெளிவுபடுத்தி விட்டது. முதலீடு, சந்திப்பு ஆகிய இரு நிகழ்வுகளையும் ஃபாக்ஸ்கான் ஒரே அறிக்கையில் விளக்கியிருக்கும் நிலையில், எப்படி அவை இரு வேறு ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்க முடியும்?
தொழில் முதலீடுகள் குறித்த பொய்களை மூடி மறைப்பதற்காக இப்போது Geopolitical issues என்ற புதிய போர்வையை திமுக அரசு கைகளில் எடுத்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிலும் செயல்படும் நிறுவனங்களால் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதாம். தொழில் முதலீடுகள் எனப்படுபவை துணியைப் போட்டு மூடிக் கொண்டு கைகளின் விரல்களை பிடித்து விலை பேசும் மாட்டுச் சந்தை பேரம் அல்ல.... அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான எந்த பரிமாற்றங்களும் வெளிப்படையாகத் தான் இருக்க வேண்டும். இவற்றில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை.
ஒருவேளை வாதத்திற்காகவே அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறுவதைப் போல Geopolitical issues காரணமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் முதலீட்டை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என்றே வைத்துக்கொள்வோம். இனி வரவிருக்கும் அந்த முதலீட்டுக்காக தமிழக அரசுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமே செய்து கொள்ளாதா? அப்போது இந்த விவரங்கள் வெளியுலகத்திற்கு தெரிந்து விடாதா? இல்லையென்றால், Geopolitical issues காரணம் காட்டி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமல், அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமல், தொழிற்சாலை அமைக்க நிலம் ஒதுக்காமல் தமிழக அரசு அனுமதித்து விடுமா? அவ்வாறு செய்வதற்கு தமிழ்நாடு என்ன திமுகவின் குடும்ப நிறுவனமா?
சட்டப்பேரவையில் பேசும் போது இந்த அவையில் இல்லாத சிலர் தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகள் குறித்து தவறாக பேசும் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைச்சர் இராஜா கூறியிருக்கிறார். எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் தான் பெயர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அமைச்சரின் நிலைமை மிகவும் பரிதாபமாகத் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் வந்தால் அதைக் கண்டு மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன். ஆனால், வராத தொழில் முதலீட்டை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் போது, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அந்த மோசடிகளை அம்பலப்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? தமிழ்நாட்டுக்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் தான் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், அதன் மூலம் 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா அவர்களும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடவில்லையா?
தொழில் முதலீடுகள் மூலமாக 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதாக நம்பும் இளைஞர்கள், ''34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் கூட நமக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே. அப்படியானால், 34 லட்சம் பேரில் ஒருவராக வேலை பெறுவதற்கான திறன் கூட நமக்கு இல்லையா?" என்று எண்ணி தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்களா?
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு மீது இவ்வளவு அக்கறை கொண்டிருக்கும் அமைச்சர் இராஜா அவர்கள்,''திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது ஏன்? அதை செய்ய திமுக அரசை எந்த சக்தி தடுக்கிறது?
இவ்வளவு வீர வசனம் பேசும் அமைச்சர் இராஜா அவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு? அவற்றை கொண்டு வந்த நிறுவனங்கள் எவை? ஒவ்வொரு நிறுவனமும் எங்கெங்கு எவ்வளவு முதலீடுகளை செய்து தொழிற்சாலைகளை அமைத்துள்ளன? அவற்றின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விவரங்கள் என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயங்குவது ஏன்? இதை செய்ய அவரை எந்த Geopolitical issue தடுக்கிறது?
மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை திமுக அரசு கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வரவேற்பேன். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுலா சென்று திரும்பி விட்டு, முதலீடுகள் குவிந்து விட்டன என்று கதை, திரைக்கதை எழுதி வசனம் பேசினால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இனியாவது மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் ராஜாத்தி அம்மாளுக்கு அண்மை காலமாக அஜீரண கோளாறு-வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அவரை கனிமொழி எம்.பி. உடன் இருந்து கவனித்து வருகிறார்.






