search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்த காட்சி.
    X
    கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்த காட்சி.

    விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திருச்சி அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த விவசாயி வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தம்மம்பட்டி செல்லும் பிரதான சாலையில் மங்கப்பட்டி புதூர் தெற்குப்பகுதியில் வசிப்பவர் தமிழரசன் (வயது 60), விவசாயி. இவருக்கு செல்வராணி (58), கலா (50) ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இருவரும், செங்கட்டு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியைகளாக பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்களது ஒரே மகன் சுபாஷ் (32). கல்லூரி பேராசிரியரான இவர் திருமணம் முடித்து கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை தமிழரசன் தோட்டத்திற்கு சென்றதையடுத்து, செல்வராணி, கலா இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.

    நேற்று மாலை பணிகளை முடித்து வீடு திரும்பிய மூவரும் வீட்டின் கேட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த பொருட்கள் கீழே சிதறிக் கிடந்தது கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். இதில் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்ததன் பேரில், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி, தனிப்பிரிவு பிரகாசம், மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நோட்டம் விட்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் ஆள் நடமாட்டங்களை அறிந்து, ஆளில்லாத வேளையில், வீட்டின் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து, உள்ளே சென்று பூட்டுகளை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.  சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×