search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோனியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
    X
    கோனியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

    கோவை கோனியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

    தேரோட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
    கோவை:

    கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவை யொட்டி கடந்த மாதம் 14-ந்தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து பூச்சாட்டு விழாவுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. பின்னர் 22-ந்தேதி கொடியேற்றம், அக்னி சாட்டு நடந்தது. 

    தினந்தோறும் பெண்கள் அக்னி கம்பத்துக்கு  புனித நீர் ஊற்றி வழிபட்டனர். திருவிழா நாட்களில் அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 

    இதையடுத்து  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடக்கிறது. பிற்பகல் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள். 

    முன்னதாக இன்று காலை அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் தேரில் எழுந்தருளிய அம்மனை தரிசித்தபடி இருந்தனர். இதனால் தேரோட்ட வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர் உள்ளிட்ட குளிர் பானங்களும், அன்னதான மும் வழங்கப்பட்டது. 

    தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் முன்பும், தேரோட்ட பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ், ரெயில்வே மேம்பாலம், கிளாசிக் டவர் வழியாக சென்றன. 

    அவினாசி சாலை, திருச்சி சாலை பகுதியில் இருந்து வைசியாள்  வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் டவுன்ஹால், உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் வழியாக பேரூர் சென்றன. பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலிவன் வீதி வழியாக காந்தி பார்க் சென்றன. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கேஜி வீதிகளில் இன்று காலை முதல் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதிக்கப்பட வில்லை.
    Next Story
    ×