search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படுகொலை செய்யப்பட்ட வாலிபர்
    X
    படுகொலை செய்யப்பட்ட வாலிபர்

    கன்னியாகுமரியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைப்பு

    கன்னியாகுமரியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்டு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. 

    கொலை நடந்த பகுதியில் மோப்பம் பிடித்த நாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கொலை நடந்த இடத்தில் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்று தடய வியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். 

    அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அந்த வாலிபரின் கழுத்து பயங்கர ஆயுதத்தால் அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருந்ததால் கொலை நடந்து பல மணி நேரம் ஆகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை மதுபோதை தகராறில் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தேர்தல் தகராறில் இந்த கொலை நடந்துள்ளதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    முதலில் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று அடையாளம் தெரிந்த பிறகுதான் கொலைக்கான பின்னணி என்ன? கொலையில் ஈடுபட்ட கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இதே நான்கு வழி சாலையில் கஞ்சா போதையில் இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத நான்கு வழி சாலை பகுதியில் இந்த கொலை நடந்ததால் அதே மாதிரியான போதை தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடை யில் குமரி மாவட்டம் மற்றும் பக்கத்தில் உள்ள நெல்லை மாவட்டம் போன்ற இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான வர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். 

    அதுமட்டுமின்றி இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 2 தனிப்படையை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நியமித்து உள்ளார். இந்த தனிப்படையினர் இந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 
    Next Story
    ×