search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் யார்? வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

    நாகர்கோவில் மாநகராட்சியில் 19-ந் தேதி தொடங்க இருக்கும் வாக்குபதிவையொட்டி வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 
    மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 

    வார்டு உறுப்பினர்கள் மாநகராட்சி தலைவரை தேர்வு செய்யும் வகையில் மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் மாதம் 4-ந் தேதி நடக்கிறது.

    நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும் மாநகராட்சித் தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது.
    இதற்கிடையே மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த கட்சி போட்டியிட வேண்டும் என்பது குறித்து கூட்டணிக் கட்சியினர் இடையே பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளனர்.

    வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. மாவட்டச் செயலாளர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எந்தெந்த வார்டில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியினரும் தாங்கள் போட்டியிட விரும்பும் வார்டுகள் குறித்த விவரங்களை திமுக கூட்டணி இடம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஒரு சில வார்டுகளை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. 

    இதனால் வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமுக மாக முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் அதிகமான வார்டுகளில் களம் இறங்க தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் பாஜக தனது செல்வாக்கை நிரூபித்து உள்ளது. 

    இந்த நிலையில் தங்களுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கட்சியிடம் வலியுறுத்தியுள்ளனர். அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலரும் தேர்தலில் களமிறங்க உள்ளனர்.

    அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள சில வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சியினரும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை கட்சியினரி டையே தற்போது நடந்து வருகிறது. 

    பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த மட்டில் ஏற்கனவே கடந்த நகராட்சித் தேர்தலில் கைப்பற்றிய வார்டுகளில் மீண்டும்களம் இறங்க தயாராகி வருகிறார்கள். மேலும் கூடுதலாக ஒரு சில வார்டுகளிலும் களமிறங்க தயாராக உள்ளனர். 

    அ.தி.மு.க-பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டில் முன்னாள் கவுன்சிலர்கள் மட்டுமின்றி புதுமுகங்களும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

    மாநகராட்சி தலைவர் பதவியில் போட்டியிடுவது யார்? என்பது குறித்து அரசியல் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் தலைவர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுமா இல்லை தி.மு.க. போட்டியிடுமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். 

    இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் தலைவர் பதவி பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்படுமா இல்லை அ.தி.மு.க. களமிறங்கும் என்பதை கட்சித்தலைமை விரைவில் அறிவிக்க உள்ளது.  

    வருகிற 19-ந் தேதி தேர்தல் முடிவடைந்து 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் விவரம் அறிவிக்கப்படும். தலைவர் பதவியை கைப் பற்றுவதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந் தேதி நடக்கிறது. 

    மார்ச் 4-ந் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் முதல் மாநகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றுவது எந்த கட்சி என்பது தெரியவரும்.
    Next Story
    ×