search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கொரோனா பாதிப்பு 73 ஆயிரத்தை கடந்தது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 73 ஆயிரத்தை கடந்தது. 7 டாக்டர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கொரோனா முதல் இரண்டு அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள். தற்போது 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.

    ஜனவரி மாத தொடக்கத்தில் பாதிப்பு மிகக் குறைவாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1457 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    கடந்த 2 நாட்களாக பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று 1037 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 1129 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் 612 பேர் ஆண்கள் 540 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் குழந்தைகள் 60 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரில் 252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோணம் பாலிடெக்னிக்கில் உள்ள சிகிச்சை மையத்திலும் வீட்டு தனிமையிலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோணம் பாலிடெக்னிக்கில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 63 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டு தனிமையில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நர்சுகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.

    நர்சுகள் 10  பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ராஜாக்கமங்கலம் பகுதியில் டாக்டர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த சக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும்  போலீஸ் ஏட்டு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநக ராட்சி ஊழியர்கள் 10-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அரசு அலுவலகங்கள் கல்விதுறை உட்பட அனைத்து துறைகளிலும் பலரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நாகர்கோவில் கோர்ட்டில் ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து  சக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

    இதில் மேலும் 4 ஊழியர்களுக்கு தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும்  பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×