search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பெண் போலீசார்.
    X
    நாகர்கோவிலில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பெண் போலீசார்.

    குடியரசு தின பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

    குடியரசு தினத்தையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.  விழாவில் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். லாட்ஜ்களில் போலீசார்அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    Next Story
    ×