search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேதாஜி ரோட்டில் சுற்றித்திரியும் நாய்கள்
    X
    நேதாஜி ரோட்டில் சுற்றித்திரியும் நாய்கள்

    மதுரையில் வெறி நாய்கள் தொல்லை அதிகரிப்பு

    மதுரையில் வெறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    மதுரை

    மனிதர்களின் உற்ற தோழனாக வளர்ப்புப் பிராணியான நாய்கள் விளங்கி வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கு வீட்டில் சரியாக தடுப்பூசி போட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் அவைகளால் பெரும்பாலும் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

    ஆனால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி மனிதர்கள் இறப்பது கொடுமையானது‌. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதன்படி உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. 

    ஆனால் காலப்போக்கில் அரசு இதனை கைவிட்டது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு தெருவிலும் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி மக்களை பயமுறுத்தி வருகிறது. 

    குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெருக்கள், சாலைகளில் என எங்கு பார்த்தாலும் மனிதர்களைப் போல் சகஜமாக திரியும் நாய்கள் திடீரென வெறி பிடித்து குழந்தைகள் முதல் முதியவர் வரை விரட்டி விரட்டி கடிக்கிறது. 

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள மாசி வீதிகள், நேதாஜி ரோடு, ஜெய்ஹிந்த்புரம் வில்லாபுரம் காளவாசல் தெற்கு வாசல் செல்லூர் வண்டியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

    தெருவில் விளையாடும் குழந்தைகள் அடிக்கடி நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். நாய் கடியால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெறுவதற்காக நாள்தோறும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.  இதை வைத்தே மாவட்டத்தில் நாய்களின் தொல்லையை கணிக்கமுடியும். 

    அண்மையில் கடலூர் மாவட்டத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை நாய்கள் கூட்டம் கடித்து குதறியது. 20க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு நிலையில் தற்போது அந்த குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

    எனவே மதுரையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகராட்சியும்,  மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வெறி நாய் கடியால் உயிர்க்கொல்லி நோயான ரேபிஸ் தாக்குகிறது. ரேபிஸ் வைரஸ் பாதித்த நாய் கடித்தாலும், கீறினாலோ நாயின் உமிழ்நீர் பட்டாலோ மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் தாக்கும். உயிரை பறிக்கும் அளவுக்கு கொடுமையானது ரேபிஸ். 

    இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் இந்த நோயால் இறக்கிறார்கள். இந்த வைரஸ் மனிதர்களை தாக்கினால் அதிகமான காய்ச்சல், தலைவலி, தசைகள் நடுக்கம், தண்ணீரை கண்டால் அச்சம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

     எனவே நாய்கள் கடித்தால் உடனே தாமதிக்காமல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். 
    Next Story
    ×