search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள், காய்கறிகளை தரையில் கொட்டி மறியல் செய்த காட்சி.
    X
    திண்டுக்கல்லில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள், காய்கறிகளை தரையில் கொட்டி மறியல் செய்த காட்சி.

    சாலையோர கடைகளை அகற்றக்கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொட்டும் மழையில் மறியல்

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள சாலையோர கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகள் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் இருந்த பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டன. இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக மார்க்கெட் செயல்படவில்லை. அதேநேரம் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரத்தில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய கடைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

    இதையடுத்து சாலையோரத்தில் கடை வைத்து இருந்த பல வியாபாரிகள், மார்க்கெட்டில் ஒதுக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அதேநேரம் ஒருசிலர் மார்க்கெட் முன்பு சாலையின் ஓரத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த சாலையோர கடைகளிலும் ஏராளமான மக்கள் காய்கறிகள், பழங்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் சாலையோர கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்கெட் வியாபாரிகள் நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது சிலர் காய்கறிகளை சாலையில் கொட்டியும், கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையோர கடைகளால் மார்க்கெட்டுக்குள் காய்கறி வாங்க மக்கள் வருவது குறைவதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சாலையோர காய்கறி கடைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×