search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கொள்ளையன் சபிமுகமதுவையும், அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான கொள்ளையன் சபிமுகமதுவையும், அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    திருப்பூரில் தொழிலதிபரிடம் கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயர் கைது - தொழில் நஷ்டத்தால் கொள்ளையனாக மாறிய பரிதாபம்

    குன்னத்தூர் தொழிலதிபர் சுப்பிரமணியை கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்ற போது சபிமுகமதுவின் உருவம் சி.சி.டி.வி.காமிராவில் பதிவாகி இருந்தது.
    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணி என்பவரது வீட்டிற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகுந்த மர்மநபர், சுப்பிரமணியை கத்தியால் குத்தி நகை - பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். சுப்பிரமணி சுதாரித்து செயல்பட்டதால் கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றான். 

    இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்த கொள்ளையனின் உருவத்தை வைத்து அவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் குன்னத்தூர் சந்தைப் பாளையத்தை சேர்ந்த துரைசாமி (வயது 61) என்பவரிடம்  மர்மநபர் ஒருவர் நேற்று கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், வாட்ச், ரூ.2400 பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார். 

    இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் குன்னத்தூர் தளபதி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். 

    விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்ததால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சபிமுகமது (வயது 37) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குன்னத்தூர் தொழிலதிபர் சுப்பிரமணியை கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. 

    மேலும் துரைச்சாமியிடம் நகை, பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கத்தி, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்த சபிமுகமது, குன்னத்தூர் பகுதிக்கு அடிக்கடி வருவது வழக்கம். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பண தேவையை சமாளிக்க அவர் குன்னத்தூரில் தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். லண்டனில் பி.இ., எம்.எஸ். படித்து பட்டம் பெற்றுள்ள அவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். காதல் திருமணம் செய்ததால் அவரது பெற்றோர் அவரை ஏற்கவில்லை. 
     
    குன்னத்தூர் தொழிலதிபர் சுப்பிரமணியை கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்ற போது சபிமுகமதுவின் உருவம் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது. இருப்பினும் அவர் போலீசாருக்கு பயப்படாமல் மீண்டும் துரைச்சாமியிடம் கைவரிசை காட்டியுள்ளார். இதன் மூலம் அவர் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார். 

    சபிமுகமதுவை பிடித்த குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, போலீசார் திவ்யா, சுரேஷ் ஆகியோரை குன்னத்தூர் பகுதி பொதுமக்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.  
    Next Story
    ×