search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிப்பு சம்பவத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து கிடக்கும் காட்சி.
    X
    தீக்குளிப்பு சம்பவத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து கிடக்கும் காட்சி.

    திருச்சியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தம்பதி- ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்

    திருச்சியில் குழந்தையின்மை, குடும்ப வறுமையால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தம்பதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் பட்டாபிராமன் ரோடு ரெஜி மண்டல் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 51). இவர் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலெட்சுமி (49).

    இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இதற்கிடையே நடராஜனும் போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு தவித்து வந்துள்ளார்.

    தற்போது கொரோனா காலம் என்பதால் ஏற்கனவே பார்த்து வந்த வேலையையும் நடராஜன் இழந்தார். மேலும் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தார். இது போன்ற பிரச்சனைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் வாழ்வதை விட இறப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு வழியில்லை என்று எண்ணிய தம்பதியினர், இன்று அதிகாலையிலேயே தூங்கி எழுந்தனர். காலை 6 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

    இதில் தீயானது மளமளவென பிடித்து உடல் முழுவதும் பற்றியது. பின்னர் வலி தாங்க முடியாமல் கதறிய தம்பதியினர் வீட்டுக்குள் அங்குமிங்கும் கதறியடி ஓடினர். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    போராடியவர்களின் அருகில்கூட செல்ல முடியாத அளவுக்கு நெருப்பின் தாக்கம் இருந்தது. உடனடியாக இதுபற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். தம்பதி தீக்குளித்து வீட்டிற்குள் போராடியதில் அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

    இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கு வறுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று அந்த பகுதி மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கம், வறுமை மற்றும் உடல்நல பாதிப்பு ஆகியவற்றால் தம்பதியினர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
    Next Story
    ×