search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை அமராவதி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    உடுமலை அமராவதி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    நீர்வரத்து அதிகரிப்பால் உடுமலை அமராவதி அணை நிரம்பியது

    உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுதால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அதிகாரி கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 90அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 87 அடியை கடந்ததால் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து 3000கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு 3894 கனஅடி நீர்  வந்து கொண்டிருக்கிறது.

    அமராவதி அணை நிரம்பியதையடுத்து இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறுவதை செல்பி எடுத்து மகிழ்ந்தனர். உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுதால்  அமராவதி ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    அணை நீர்வரத்தை உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

    தற்போது 5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உள்ள 9 கண்மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×