search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம்

    நாளை 26-ந்தேதி முதல் உயர் கல்வி சேர்க்கை தொடங்குகிறது. மாற்றுச்சான்றிதழுடன் தற்போது வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழை கொண்டு சேர்ந்து கொள்ளலாம்.
    உடுமலை:

    பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு  முடிவு அறிவிக்கப்பட்டது. தற்போது, மாணவ, மாணவிகளின்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் 37 பள்ளிகளில் 1,750 மாணவர்கள், 2,357 மாணவிகள் என 4,107 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை  பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிலர் நேரடியாகவே தங்களது சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.

    அதேநேரம் உயர்கல்வி சேர்க்கை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள்  ஆசிரியர்களை சந்தித்து தங்களது மாற்றுச்சான்றிதழ்களை வாங்கிச்செல்கின்றனர். அப்போது சிலர் ஆசிரியர்களிடம் ஆசியும் பெறுகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நாளை 26-ந்தேதி முதல் உயர் கல்வி சேர்க்கை தொடங்குகிறது. மாற்றுச்சான்றிதழுடன் தற்போது வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழை கொண்டு சேர்ந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு போன்ற பணிகளிலும் ஈடுபடலாம். நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட்டு விரைவில் வழங்கப்படும்.

    கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×