search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல்லை மாவட்டத்தில் ரவுடிகள் வேட்டையில் ஒரே நாளில் 57 பேர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அதிரடி ஆபரேசனில் மொத்தம் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் நெல்லையை அடுத்த வாகை குளத்தை சேர்ந்த முத்துமனோ பாளை ஜெயிலில் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்தில் கட்டிட காண்டிராக்டர் கொலை செய்யப்பட்டார்.

    தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதிலும் சமூக ரீதியாகவும், பழிக்குப்பழியாகவும் கொலை நடந்து வருவதால் தென்மண்டல ஐ.ஜி. அன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரையில் வைத்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட தனிப்படை போலீஸ் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது.

    அதில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட ரவுடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முதல் கட்டமாக வி.கே.புரம், தாழையூத்து, சுத்தமல்லி, பாளை, முன்னீர் பள்ளம், சேரன்மகாதேவி, சீவலப்பேரி, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தாழையூத்து சப்-டிவி‌ஷனில் கொலை முயற்சி, கஞ்சா கடத்துதல், மது விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை கைது செய்தனர். வள்ளியூர் சப்-டிவி‌ஷனில் பழைய ரவுடிகள் 4 பேரும் மதுபாட்டில் கடத்திய 5 பேர் உள்பட 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    அம்பை சப்-டிவி‌ஷனில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர், பழைய ரவுடிகள் பட்டியலில் உள்ள 26 பேர் என மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர். சேரன் மகாதேவி சப்-டிவி‌ஷனில் கொலை முயற்சி மற்றும் மது கடத்துதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட தலா 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அதிரடி ஆபரேசனில் மொத்தம் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×