search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பூஞ்சை
    X
    கருப்பு பூஞ்சை

    ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த முடியும்- சுகாதாரத்துறை தகவல்

    கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகி உயிரிழப்பு கூட நேரிடலாம்.

    புதுச்சேரி:

    புதுவையில் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், சிகிச்சை முடிந்த கொரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

    புதுவையில் இதுவரை 40 நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு அதில் 2 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். இதுபற்றி சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் கூறியதாவது:-

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்து அதற்கான மருந்துகளை எடுத்து சர்க்கரை அளவினை சீராக பாதுகாத்து வந்தால் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    வீட்டிலேயே ஆக்சிஜன் உபயோகப்படுத்துபவர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் அல்ல. கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்பினால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது.

    மருத்துவரின் பரிந்துரையின்றி ஸ்டீராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

    இதனை ஆரம்பகட்ட நிலையிலேயே அறிந்து கொள்ள கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தலைவலி, மூக்கடைப்பு, கருப்புநிற சளி, மூக்கு வாய் பகுதியில் கருப்பு புள்ளிகள் காணப்படுவது, கண்ணில் வலி அல்லது வீக்கம், ரெட்டை பார்வை, பல்வலி, பல் ஆடுதல் ஆகிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

    இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் கால தாமதமானால் இந்த கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகி உயிரிழப்பு கூட நேரிடலாம்.

    இவ்வாறு அருண் கூறினார்.

    Next Story
    ×