search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணியை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த காட்சி
    X
    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணியை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த காட்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கொரோனா தடுப்பு பணி கண்காணிப்பாளர் சமயமூர்த்தி கூறினார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை செயலாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்புப்பணி கண்காணிப்பாளர் சமயமூர்த்தி, கலெக்டர் கிரண்குராலா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    பின்னர் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2,450 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது 2,367 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், வீட்டில் தனிமைப்படுத்தியும் கொண்டுள்ளனர். இவர்களில் எந்தவித அறிகுறியும் இல்லாத 80 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொண்டுள்ளனர்.

    கொரோனா தொற்றால் 3-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதி தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில்-30, கிராம பகுதிகளில்-24 என மொத்தம் 54 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சிகிச்சை அளிக்க 540 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. இதில் 100 முதல் 150 வரை ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும் சிறுவங்கூர் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக ஆக்சிசன் படுக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணியில் இந்த மாவட்டம் முறையாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து தொற்று அதிகம் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 பேர் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு இறப்பு கூட கொரோனாவால் உயிரிழந்ததாக வெளியிடப்படவில்லை ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த சமயமூர்த்தி, கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பரிசோதனை செய்யும்போது நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், மத்திய அரசு வழிகாட்டு முறைப்படி தான் வகைப்படுத்துகிறோம். இது போல் மற்ற மாவட்டங்களில் இருக்கிறது. 51-வயதுக்கு மேல் உள்ள 60 சதவீதம் பேர் பக்க விளைவுகளால் உயிரிழக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    இதைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள், ஆக்சிஜன் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து டீன் உஷாவிடம் கேட்டறிந்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதேபோல் மருத்துவமனை முன்பு நோயாளிகளை வகைப்படுத்தும் மையத்தை ஆய்வு செய்த அவர் பிரசவ வார்டுக்கு செல்லும் பாதை நோயாளிகளை வகைப்படுத்தும் மையத்தின் அருகில் இருப்பதால் கர்ப்பிணிகள், அவர்களின் உதவியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பிரசவவார்டுக்கு செல்ல மாற்று வழிப்பாதை ஏற்படுத்த வேண்டும், பிரசவ வார்டு மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார். அப்போது கலெக்டர் கிரண்குராலா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், கொரோனா வார்டு தலைமை மருத்துவர் பழமலை, மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×