search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    மீனவர்கள் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு: மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை வைத்து மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் நேற்று சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் போராட்டம் நடந்தது. அவர்கள் பஸ் நிலையம் எதிரில் இருந்து சங்கு ஊதியபடி ஊர்வலமாக கோஷமிட்டபடி புறப்பட்டனர்.

    ஊர்வலமாக வந்த மீனவர்கள் ராமேசுவரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மீன் துறை அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா மற்றும் சி.ஐ.டி.யூ.யை சேர்ந்த சிவாஜி, மணிகண்டன் ராமச்சந்திர பாபு மற்றும் ராமேசுவரம் தனுஷ்கோடி பாம்பன் பகுதியை சேர்ந்த ஏராளமான நாட்டுப்படகு மீனவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டம் நடத்திய மீனவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீன் துறை அதிகாரிகள் மீனவர்களை சந்தித்து பேசி மனுவை பெற வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பு போராட்டம் நடத்திய மீனவர்களை மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கரையோர கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×