search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் வாட்டி எடுக்கும் வெயில்- அனல் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி

    அம்பன் புயலின் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாகவே காற்றின் ஈரப்பதம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் காணப்படும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிகவும் அதிகமாகவே உள்ளது.

    வெயிலின் உக்கிரம் உச்சகட்டமாக இருக்கும் காலமான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

    வருகிற 28- ந்தேதி வரையில் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் தலை காட்ட வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்த நிலையில் வங்க கடலில் உருவான அம்பன் புயலும் அக்னி நட்சத்திரத்தோடு சேர்ந்தது. நேற்று மேற்கு வங்காளம்-ஒடிசா இடையே அம்பன் புயல் கரையை கடந்தது. புயலின் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாகவே காற்றின் ஈரப்பதம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் 108 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. இந்த ஆண்டில் இதுவே அதிகபட்ச வெயிலாகும்.

    கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதன் பிறகு இப்போது தான் அதிக வெயில் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 8 நகரங்களிலும் நேற்று வெயில் அதிகமாகவே காணப்பட்டது. நாகையில் 104 டிகிரியும் கரூர் பரமத்தியில் 102 டிகிரியும் கடலூரில் 107 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது. பரங்கிபேட்டை, வேலூரில் 107 டிகிரியும் சேலம், மதுரையில் 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.

    சென்னையில் நேற்று பகலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. அனல் காற்றும் வீசியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகளில் குளிர்பானங்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

    கொரோனா பரபரப்புக்கு மத்தியில் கோடைவெயிலும் பொதுமக்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. இரவு நேரங்களிலும் வீட்டில் வெப்பம் அதிகமாகவே உள்ளது. இதனால் நிம்மதியான தூக்கமும் கலைந்து போய் உள்ளது.
    Next Story
    ×