search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் மறியல் நடந்த போது எடுத்த படம்.
    X
    ராஜபாளையத்தில் மறியல் நடந்த போது எடுத்த படம்.

    பொது வேலை நிறுத்தம் - மறியலில் ஈடுபட்ட 1587 பேர் கைது

    தொழிற்சங்கத்தினரின் பொது வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத நிலையில் மறியலில் ஈடுபட்ட 1587 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    நாடு முழுவதும் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்த வேண்டும். வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து இருந்தனர்.

    தமிழகத்தில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொது வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1527 வங்கி ஊழியர்களில் 195 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணப் பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்படவில்லை. மொத்தம் உள்ள 2750 அரசு போக்குவரத்து ஊழியர்களில் 189 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் வழக்கம்போல் ஓடின. மின்வாரியத்தை பொறுத்தமட்டில் மொத்தம் உள்ள 1850 ஊழியர்களில் 524 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரும்அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.

    பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 380 பேரில் 8 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் செயல்பட்டன. எல்.ஐ.சி.ஊழியர்கள் 210 பேரில் 100 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விருதுநகர், அருப்புக்கோட்டையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் தங்கள் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில் வருவாய்த்துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள 3520 சத்துணவு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. சத்துணவு மையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. 2760 அங்கன்வாடி பணியாளர்களில் 573 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    நுகர்பொருள் வாணிப கழகத்தில் மொத்தம் உள்ள 317 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார். மாவட்டம் முழுவதும் உள்ள 10,381 ஆசிரியர்களில் 1260 பேர் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தபால்துறையில் மொத்தம் உள்ள 800 ஊழியர்களில் 428 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஒரு சில தபால் நிலையங்கள் செயல்படவில்லை.

    மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 20 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. பாண்டியன், சி.ஐ.டி.யூ. மகாலட்சுமி, முருகன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சக்கணன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆமத்தூரில் 3 பெண்கள் உள்பட 20 பேரும், ஆர்.ஆர்.நகரில் 17 பெண்கள்உள்பட 55 பேரும், சிவகாசியில் 22 பெண்கள் உள்பட 92 பேரும், திருத்தங்கலில் 12 பெண்கள் உள்பட 32 பேரும் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

    ராஜபாளையத்தில் ஸ்டேட் வங்கி முன்பு மறியல் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி. ரவி, விஜயன், ரமேஷ், சி.ஐ.டி.யூ. கணேசன், மாரியப்பன், சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. கண்ணன், சக்தி, எச்.எம்.எல். கண்ணன், மகாலிங்கம், எல்.பி.எப். சாந்தகுமார்் நடராஜன், திருவேட்டைபோத்தி, எம்.எல்.எப். இன்பமணி கண்ணன், எஸ்.டி.டி.யூ. முகமது இலியாஸ் சித்திக் உள்பட ஏராளமான தொழிலாளர்களும் அங்கன்வாடி தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.மறியலில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 190 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சாத்தூரில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் அங்கன்வாடி மாவட்ட செயலாளர் சாரதா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை மற்றும் சாத்தூர் சாலைபோக்குவரத்து தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மறியல் நடந்தது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி தலைமையில் மறியல் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் கிருஷ்ணன்கோவில் பஸ் நிலைய பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்

    தளவாய்புரத்தில் பஸ் நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று செட்டியார்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட குழு செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் காதர் மைதீன், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், வட்டார செயலாளர் வீராச்சாமி, ஒன்றிய செயலாளர் அணி பூதத்தான் உள்பட135 பேர்கைது செய்யப்பட்டனர்.

    வத்திராயிருப்பில் முத்தாலம்மன் திடல் பகுதியில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர்,தொழிலாளர்கள் விடுதலை முன்னணி சமுத்திரக்கனி ஆகியோர் தலைமைதாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் மணிக்குமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜீ, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குளத்தில் டி.என்.சி.முக்குரோட்டில் மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் நடராஜன் தலைமையில் மறியல் நடந்தது. அங்கு 24 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

    அருப்புக்கோட்டை புதுபஸ் நிலையம் அருகில் மறியல் செய்த 148 பேரும், பாலையம்பட்டியில் 26 பேரும், மல்லாங்கிணறில் 130 பேரும், கீழராஜகுலராமனில் 127 பேரும், சத்திரப்பட்டியில் 45 பேரும், திருச்சுழியில் 60 பேரும், நரிக்குடியில் 51 பேரும் கைதாயினர். மறியல் செய்ததாக மொத்தம் 1587 பேர் கைதாயினர்.
    100 நாள் வேலைக்கு தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மம்சாபுரத்திலும், ஏழாயிரம்பண்ணையிலும் மறியலில் ஈடுபட்டனர். மம்சாபுரத்தில் ஜோதிலட்சுமி தலைமையிலும், ஏழாயிரம் பண்ணையில் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் நடந்த மறியலில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் மறியல் நடந்த இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் இருந்த மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×