search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல் - உளவுத்துறை அதிர்ச்சி

    இந்தியாவில் சேட்டிலைட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்ததால் உளவுத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
    திருப்பூர்:

    பின்னலாடை நகரமான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதில் தொழிலாளர்கள் போர்வையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய மற்றும் வங்கதேச வாலிபர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    கடந்த மாதம் கர்நாடக மாநில பதிவு எண்கொண்ட காரில் 4 பயங்கரவாதிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவியுள்ளனர் என்று உளவுத்துறை உஷார்படுத்தியது. இதனையடுத்து நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பாதுகாப்பு கருதி இந்தியாவில் சேட்டிலைட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு 11 மணியளவில் ராமநாதபுரம் உச்சிபுளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் சாட்டிலைட் போன் சிக்னல் கிடைத்தது.

    அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சிக்னல் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தபோது அது திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள ஆதியூரில் இருந்து கிடைத்தது கண்டு பிடித்தனர்.

    இது குறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) மூலமாக விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மத்திய உளவு பிரிவு போலீசார் சேட்டிலைட் போனை பயன்படுத்தியது யார்? எந்த நாட்டில், யாரிடம், என்ன பேசினர்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத கும்பல் நாச வேலையில் ஈடுபட பதுங்கியுள்ளனரா? என்பது குறித்து கியூ பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×