search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்மமான முறையில் இறந்த திருச்சியை சேர்ந்த சங்கீதாவுடன் அவரது தாய் ஜான்சிராணி.
    X
    மர்மமான முறையில் இறந்த திருச்சியை சேர்ந்த சங்கீதாவுடன் அவரது தாய் ஜான்சிராணி.

    நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் கொலை? பிரேத பரிசோதனையை மாற்றியதாக புகார்

    நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் துன்புறுத்தி கொல்லப்பட்டதாகவும், பிரேத பரிசோதனையை மாற்றியதாகவும் பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பாலியல், கடத்தல் வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார்.

    அவர் ஈகுவெடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது. ‘கைலாசா’ நாட்டில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக கூறி நித்யானந்தா வீடியோ வெளியிட்டார்.

    தொடர்ந்து தன் மீதான விமர்சனங்கள், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் வரும் ‘மீம்ஸ்’களுக்கு பதிலடி கொடுத்தும், நகைச்சுவையாகவும் பேசி பல வீடியோக்களை வெளியிட்டார்.

    தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா மீது வெளிநாட்டு பெண் ஒருவர் பெங்களூரு போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். இதேபோல் மோசடி புகார்களும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகார் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன்-ஜான்சி ராணி தம்பதியின் மூத்த மகள் விஜி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த விஜியின் சகோதரி சங்கீதா பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தியான வகுப்புக்கு சென்று வந்தார்.

    பின்னர் சங்கீதா ஆசிரமத்திலேயே தங்கி பணியாற்றி வந்தார். ஆசிரமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி சங்கீதா மர்மமான முறையில் உயிரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சங்கீதாவை நித்யானந்தா ஆசிரமத்தில் துன்புறுத்தி கொலை செய்துவிட்டதாக பெங்களூரு ராம்நகர் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சங்கீதா மாரடைப்பால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இளம் வயதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. அவர் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம், இதை மறைக்க பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி போலியாக தயார் செய்திருக்கலாம் என ஜான்சிராணி புகார் கூறினார்.

    சங்கீதாவன் மர்ம சாவு குறித்த வழக்கு விசாரணை பெங்களூரு ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை ஒரு முறை மட்டுமே இவ்வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கை பெங்களூரு போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை என சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி குற்றம் சாட்டினார். எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை மனு அளித்தார்.

    இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சகம், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நித்யானந்தா

    ஜாமீனில் வர முடியாத வகையில் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் எனவும், நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியாவிட்டால் ‘இன்டர்போல்’ மூலம் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்கி, அவரை இந்தியா அழைத்து வர வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    உள்துறை உத்தரவைத் தொடர்ந்து நித்யானந்தாவை விரைவில் கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×