search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கருணாநிதி மறைவால் அதிர்ச்சி- நெல்லையில் அரிசி வியாபாரி உள்பட 3 பேர் பலி
    X

    கருணாநிதி மறைவால் அதிர்ச்சி- நெல்லையில் அரிசி வியாபாரி உள்பட 3 பேர் பலி

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை அறிந்து நெல்லையில் அரிசி வியாபாரி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    நெல்லை:

    நெல்லை டவுன் வெள்ளம் தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன் என்ற குருசாமி (வயது 49). இவர் வீடுகளுக்கு அரிசி ஆர்டர் எடுத்து சப்ளை செய்யும் வியாபாரி. இவர் நெல்லை 44-வது வார்டு தி.மு.க. நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மனைவி சங்கரி (42). இவர் கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தி.மு.க. சார்பாக போட்டியிட வார்டு கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இவர்களுக்கு சுப்பையா (20), சரவணன்(17) என்ற 2 மகன்கள் உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக எப்போதும் டி.வி.யில் கருணாநிதி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையே பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கருணாநிதி மறைவு செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தார். தனது மனைவி சங்கரி மற்றும் உறவினர்களிடம் கருணாநிதி மரணம் பற்றி மிகுந்த கவலையுடன் பேசி வந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு ஏராளமான தி.மு.க. பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் ஊரைச் சேர்ந்தவர் சண்முகையா (68) இவருக்கு முத்துகுட்டி என்ற மனைவியும் செல்வகுமார் வசந்தகுமார் என்ற மகன்களும் ராமலெட்சுமி அனிதா என்ற மகள்களும் உள்ளனர். சண்முகையா சென்னையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார்.

    சென்னையில் குடிசை அமைத்து தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த சண்முகையாவுக்கு தமிழக முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்கப்பட்டது. கலைஞர் தனக்கு வீடு வழங்கியது பெரும் பாக்கியம் என்று அடிக்கடி சொல்லி வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான மருக்காலங்குளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகையா வந்தார். நேற்று கலைஞர் இறந்த செய்தியை தொலைக்காட்சி வாயிலாக பார்த்த வண்ணமாக இருந்தார். அதிர்ச்சியில் இருந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தார்கள் அவரை தூக்கி பார்த்தபோது உயிர் பிரிந்து விட்டது.

    இதேபோல் மருக்காலங்குளம் ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி( 68 )கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சண்முகத்தாய் (65) என்ற மனைவியும் முனீஸ்வரன், ராசேந்திரன், சுரே‌ஷ,குமார் என்ற 3 மகன்களும் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். கலைஞர் மீது தீராத பற்று கொண்டவர் கலைஞர் குறித்து எப்போதும் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று கலைஞர் காலமானார் என்ற செய்தி மாலையில் வெளியிடப்பட்டது முதல் ஏங்கி அழுத வண்ணமாக இருந்துள்ளார். இதையடுத்து ஏங்கி அழுதவாறு மயங்கி விழுந்துவிட்டது. குடும்பத்தினர்கள் ஓடி வந்து பார்த்த போது இறந்துவிட்டது தெரிய வந்தது. ஒரே ஊரில் முன்னாள் முதல்வர் கலைஞருக்காக இருவர் இறந்துவிட்டதால் மருக்காலங்குளம் ஊரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.#RIPKarunanidhi #Karunanidhi #DMK
    Next Story
    ×