search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி கட்சி புதுவையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
    X

    ரஜினி கட்சி புதுவையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சி புதுவையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் தமிழ்நாட்டின் உள்பகுதியில் அமைந்திருந்தாலும் இங்கு மாறுபட்ட அரசியலே நீடித்து வருகிறது.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் தி.மு.க. அதை வீழ்த்திவிட்டு 1967-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சர் ஆனார். அதே காலகட்டத்தில் புதுவையிலும் காங்கிரசை வீழ்த்திவிட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

    தமிழ்நாட்டில் அன்று வீழ்ந்த காங்கிரஸ் கட்சி பின்னர் எழுந்திருக்கவே இல்லை. ஆனால் புதுவையில் மறு தேர்தலிலேயே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. உடைந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அந்த கட்சி 1977-ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனார். அதே காலகட்டத்தில் புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. இடையில் அந்த ஆட்சி கவிழ்ந்து மறுபடி நடந்த தேர்தலில் அ.தி.மு.க. இங்கு ஆட்சிக்கு வந்தது.

    பின்னர் மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது. அதன்பிறகு புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி வரவே இல்லை. அடுத்து காங்கிரஸ், தி.மு.க. என மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் வேறு கட்சி ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் புதுவையில் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த காலத்திலேயே வேறு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது.

    மூப்பனார் தொடங்கிய த.மா.கா. கட்சி புதுவையில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கட்சியில் புதுவையில் முக்கிய தலைவர்களில் ஒருவரான கண்ணன் தலைவராக இருந்தார். இதன் காரணமாக புதுவையில் நடந்த தேர்தலில் புதுவையில் த.மா.கா. சில தொகுதிகளை கைப்பற்றியது.

    தமிழ்நாட்டில் பல நடிகர்கள் கட்சியை தொடங்கி நடத்தி வந்தாலும் அந்த கட்சிகள் புதுவையில் எடுபடவில்லை. சிவாஜி கணேசன் நடத்திய தமிழக முன்னேற்ற முன்னணி, விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க., சரத்குமார் தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக் தொடங்கிய நாடாளும் மக்கள் கட்சி, டி.ராஜேந்திரன் லட்சிய தி.மு.க., பாக்கியராஜ் தொடங்கிய எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம் என பல கட்சிகள் தமிழகத்தில் உருவானாலும் அவை புதுவையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    விஜயகாந்த் கட்சி தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும் புதுவையில் ஒரு தொகுதிகளில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. பெரிய அளவில் ஓட்டையும் பிரிக்கவில்லை.

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொடங்கப்படும் அனைத்து கட்சிகளும் புதுவையிலும் தொடங்கப்படுவது வழக்கம்.

    ஆனால் புதுவையில் அது எடுபடுமா? என்பது தான் கேள்விக்குறி. தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் புதுவையில் மாறுபட்ட அரசியல் இருப்பதால் ரஜினி தொடங்கும் கட்சி இங்கு புதிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை.

    இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் எந்த கட்சியுமே புதுவையில் முதன்மை இடத்தில் இல்லை. இங்கு பிரதான கட்சியாக காங்கிரசும், என்.ஆர். காங்கிரசும் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் தான் மற்ற கட்சிகள் இருக்கின்றன.

    ரஜினி தொடங்கும் கட்சி காங்கிரசையும், என்.ஆர். காங்கிரசையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வருவது அவ்வளவு எளிதான வி‌ஷயம் அல்ல. எனவே ரஜினியின் கட்சி புதுவையில் என்ன மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.
    Next Story
    ×