search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் பாக்கிக்கும் - மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் தங்கமணி
    X

    கடன் பாக்கிக்கும் - மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் தங்கமணி

    வட சென்னையில் நேற்றிரவு மின் தடை ஏற்பட்டதையடுத்து அமைச்சர் தங்கமணி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்கும் - மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தார்.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் மூலம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்துக்கு 1066.95 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. மீதம் உள்ள மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை மின்சாரம் பெற்ற வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடியே 5 லட்சம் வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு பாக்கி வைத்துள்ளது.

    இந்த தொகையை செலுத்த நேற்று கடைசி நாளாகும். ஆனால் இந்த பாக்கியை தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்தாததால் மின் வினியோகத்தை வல்லூர் அனல் மின் நிலையம் நேற்று அதிரடியாக நிறுத்தி விட்டது. இதனால் தான் சென்னையின் பல பகுதிகள் இருளில் மூழ்கியதாக தகவல்கள் வெளியானது.

    இது பற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-



    வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்கும் மின் தடைக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் நுகர்வோர்களின் தேவைக்கு அதிகமாகவே மின்உற்பத்தி உள்ளது. மணலியில் இருந்து வரும் மின்கேபிள் நேற்றிரவு துண்டிக்கப்பட்டிருந்த காரணத்தால் தான் வடசென்னையில் மின்தடை ஏற்பட்டது.

    உடனே நான் இரவில் வட சென்னை மின் நிலையத்துக்கு அதிகாரிகளுடன் சென்றேன். விடிய விடிய அங்கேயே இருந்து பழுதுகளை சரி செய்யும் வரை முகாமிட்டிருந்தேன்.

    முதலில் அரசு தலைமை மருத்துவமனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு மின் வினியோகம் சிலமணி நேரத்தில் விரைந்து கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படிப்படியாக இரவு 3 மணியில் இருந்து மின்வினியோகம் கொடுக்கப்பட்டது.

    வல்லூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், தமிழ் நாட்டில் நுகர்வோர்களின் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருக்கிறது. ஆங்காங்கே ஏற்படும் கேபிள் பழுது, டிரான்ஸ்பார்மர் ரிப்பேர் காரணமாகவே மின்தடை ஏற்படுகிறது. அதையும் அவ்வப்போது ஊழியர்கள் சரி செய்து மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு தங்கமணி கூறினார்.
    Next Story
    ×