search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களிடம் 25 பவுன் செயின் பறிப்பு: ரெயில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை போலீஸ்
    X

    பெண்களிடம் 25 பவுன் செயின் பறிப்பு: ரெயில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை போலீஸ்

    ரெயிலில் 25 பவுன் நகைகளை பறி கொடுத்த பெண்கள் கொடுத்த தகவலை வைத்து கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    பெங்களூருவில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர்-பாறையூர் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எஸ்.3,4,6,7,8 ஆகிய 5 பெட்டிகளில் 5 பேர் கொண்ட கொள்ளையர்கள், சென்னையை சேர்ந்த பிருந்தா (வயது 26) என்பவர் உள்பட 6 பெண்களிடம் கத்தி முனையில் மிரட்டி 25 பவுன் நகைகளை பறித்தனர்.

    பிறகு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கொள்ளை கும்பல் ரெயிலை நிறுத்தியது. பின்னர் 5 பேரும் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

    ரெயில்வே கோட்ட டி.எஸ்.பி. குமரேசன் தலைமையில் ஜோலார்பேட்டை ரெயில்வே இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க டி.எஸ்.பி. குமரேசன் தலைமையில் 4 தனிப்படை போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான ஒரு தனிப்படை போலீசார், ஜோலார்பேட்டையில் இருந்து கோவை வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான 2 தனிப்படை போலீசார், ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வரையிலும், மொரப்பூர் மார்க்கமாகவும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    டி.எஸ்.பி. குமரேசன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், குப்பம் மற்றும் பச்சூர் பகுதிகளில் ரெயில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு வலை விரித்து பிடிக்க களம் இறங்கியுள்ளனர்.

    மேலும் சென்னை ரெயிலில் கொள்ளை நடந்த அந்த நேரத்தில், பச்சூர்- பாறையூர் இடையே பதிவான செல்போன் எண்களின் சிக்னல்களும் ஆராயப்பட்டு வருகிறது.

    சிக்னல்கள் மூலம் பதிவான செல்போன் எண்களை கண்டறிய சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த 6 பேர் குழு வரைவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், ஒரு பெட்டி போன்ற சாதனம் மூலம் செல்போன் எண்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

    ரெயிலில் கைவரிசை காட்டிய கும்பல், ஆந்திர கொள்ளையர்களா? அல்லது வடமாநில கொள்ளை கும்பலா? என்பதை அறிய நகைகளை பறி கொடுத்த பெண்கள் கொடுத்த தகவலை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×