search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  தரகர் சுகேஷ்சந்திரசேகர் மிகப்பெரிய மோசடி மன்னன்
  X

  தரகர் சுகேஷ்சந்திரசேகர் மிகப்பெரிய மோசடி மன்னன்

  இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக ரூ. 50 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர் மிகப்பெரிய மோசடி மன்னன் என்று தெரிய வந்துள்ளது.
  சென்னை:

  இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக ரூ. 50 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர் மிகப்பெரிய மோசடி மன்னன் என்று தெரிய வந்துள்ளது.

  இவரது பூர்வீகம் கர்நாடக மாநிலமாகும். பெங்களூரில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துள்ளார்.

  இளம் வயதிலேயே மோசடியில் இவர் ஈடுபட தொடங்கினார். அரசு துறைகள் வெளியிடும் டெண்டர் நோட்டீசுகளை இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்வார். பிறகு அவர் அந்த டெண்டர்களை விரும்புவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.

  அரசின் உயர் பதவியில் இருப்பதாக அவர் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். அல்லது தனக்கு அரசியல் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவு இருப்பதாக கூறுவார்.

  டெண்டர்களை பெற்று தருவதாக ஆசை வார்த்தை சொல்வார். இதை நம்புவர்களிடம் முதல் கட்டமாக சில லட்சங்களை பெறுவார். நன்றாக ஏமாறுபவர்களிடம் கோடிக்கணக்கில் கூட அவர் மோசடி செய்வது உண்டு.

  இந்தியா முழுவதும் இவர் பல வகைகளில் கோடீசுவர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். பெரிய தொழில் அதிபர்களிடம் நான் முதல்-அமைச்சரின் பேரன் என்று சொல்லி மோசடி செய்துள்ளார்.

  தென் மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் அவர் அரசியல்வாதிகளின் மகன் என்று சொல்லி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.

  கர்நாடகாவில் அரசு அலுவலகத்தில் ஒரு தடவை ரூ.65 லட்சம் மோசடி செய்தான். 2015-ம் ஆண்டு மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த போது கைதானான்.

  தமிழ்நாட்டில் உள்ள பிரபல பேரீச்சம் பழம் நிறுவனமான லயன்டேட்ஸ் நிறுவனத்திடமும் கைவரிசை காட்டி உள்ளான். கர்நாடகாவில் உள்ள உயர் அதிகாரி பேசுவது போல பேசி அவன் இந்த மோசடியில் ஈடுபட்டான்.

  அதாவது கர்நாடகாவில் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு பேரீச்சம் பழம் சப்ளை செய்ய வேண்டும் என்று சொல்லி ரூ.80 ஆயிரம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டான்.

  இது தொடர்பாக லயன்டேட்ஸ் நிறுவனம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  கொல்கத்தாவில் வைர வாரம் செய்வதாக சொல்லி மோசடி செய்தான். அப்போது அவனிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஒரு வைர மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இவரது உண்மையான பெயர் பாலாஜி. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களில் வலம் வந்துள்ளார். சென்னை போலீசிடம் 2 முறை சிக்கி உள்ளார்.

  கடந்த 2013, 2015-ம் ஆண்டுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். இவன் அப்போது காதலி லீனா மரியாபாலுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது அம்பலானது.

  சென்னையைச் சேர்ந்த டாக்டர் இளங்கோவன் என்பவரிடம் டாக்டர் சீட்டு வாங்கி தருவதாக பணம் பறித்து வந்துள்ளான்.

  அம்பத்தூர் கனரா வங்கியிலும் ரூ. 19 கோடி வாங்கி மோசடி செய்தார். இந்த வழக்கிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு விதமான மோசடி வழக்குகள் உள்ளன. கடந்த முறை எங்களிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். மும்பையில் அவரை கைது செய்தோம்.

  அரசியல்வாதிகள், அதிகாரிகள் எவ்வளவு பதவியில் இருந்தாலும் அவர்களை பேச்சாலே கவர்ந்து விடுவான். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசுவான். அப்படி பேசிதான் நடிகை லீனா அவனது காதலி ஆனார்.

  அவனது மோசடி லீலைகளுக்கு லீனாவும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் அவரையும் கைது செய்தோம்.

  சுகேஷ் அடிக்கடி வெவ்வேறு பெயர்களில் சிம் கார்டுகளை மாற்றுவான். இதனால் இந்தியா முழுவதும் அவனால் மோசடி செய்ய முடிந்தது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மோசடி செய்து சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ரூபாயை தண்ணீராக செலவழித்து சொகுசாக வாழ்வதை அவன் வழக்கத்தில் வைத்திருந்தான்.

  விலை உயர்ந்த கைகெடிகாரம் கட்டுவதை விரும்புவான். அதுபோல வெளிநாட்டு சொகுசு கார்களில் வலம் வருவதையும் வழக்கத்தில் வைத்திருந்தான்.

  நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது போலீசாரிடம் சிக்கி இருக்கிறான்.
  Next Story
  ×