search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  தேச விரோத வழக்கு: வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
  X

  தேச விரோத வழக்கு: வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

  தேச விரோத வழக்கில் கைதாகி உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
  சென்னை:

  சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி குற்றம் சாட்டுகிறேன் என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார்.

  அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் 13வது குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

  இந்த வழக்கு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.

  அவரை ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கேட்டுக் கொண்டதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார்.

  இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, இன்று மீண்டும் அதே வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது அதனால், இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும், வைகோவை வருகிற 27ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

  இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  2009ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த ஆட்சியில் பங்கு பெற்றிருந்த தி.மு.க. தமிழகத்தை ஆண்டது. இந்த இரு கட்சிகளும், லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதை மக்களுக்கு நினைவுப்படுத்தியதால் இந்த வழக்கில் நான் சிறை சென்றேன்.

  இந்த தேச விரோத வழக்கில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுக்க மாட்டேன். நான் என்ன பேசினேனோ அதை அப்படியே ஒப்புக்கொள்வேன். இதனால் எனக்கு இந்த தேச துரோக வழக்கில் சிறை தண்டனை கிடைத்தாலும், அதை தயங்காமல் ஏற்பேன். சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

  விவசாயிகள் பிரச்சினைக்காக தி.மு.க. அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, வருகிற 25ந் தேதி முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளது. ம.தி.மு.க.வை பொருத்தவரை இந்த போராட்டத்துக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. நடுநிலை வகிக்கின்றோம்.  விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக விவசாயிகளை சந்தித்து பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

  காவிரி வி‌ஷயத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாகவும் தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் அரசு செயல்படுகிறது.

  கர்நாடகாவின் மேகதாது பகுதியில் தடுப்பு அணை கட்டும் பணியை தொடங்கி விட்டார்கள். அணை கட்டப்பட்டு விட்டால் காவிரியில் இருந்து மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது.

  தமிழகத்தில் நமக்கு தேவையான தண்ணீரை நாமே சேமித்துக் கொள்ள வேண்டும். அதற்காக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ம.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

  ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் வர விட மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவதற்காக இளைஞர்கள் புறப்படும் போதே கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

  மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய பெண்ணை ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தாக்கியுள்ளார். அவர் மீது இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல் துறையில் ஒழுக்கமான அதிகாரிகளும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கறைகள் பிடுங்கி எறியப்பட வேண்டும். இல்லாவிட்டால் காவல் துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×