search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  இந்த ஆண்டு கோடை வெயில் 115 டிகிரியை தாண்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  X

  இந்த ஆண்டு கோடை வெயில் 115 டிகிரியை தாண்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் அளவு 115 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உடலை பாதுகாப்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
  வேலூர்:

  வேலூர் மாவட்டத்தில் கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. கடந்த வாரமாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்துகிறது.

  நேற்று முன்தினம் 102.7 டிகிரி வெயில் அடித்தது. நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது. இதுவரை பதிவான வெயில் அளவில் இது அதிகபட்சமாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 103.2 டிகிரி வெயில் பதிவானது.

  கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

  வெயில் காரணமாக வேலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பலியானார். திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு ப.வு.ச.நகர் பகுதியில் நேற்று மதியம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.

  வெயில் கொடுமையை தாங்க முடியாத அவர் அங்கேயே சாலையோரம் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம்? என்ற அச்சத்தில் உள்ளனர்.

  நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  அந்த வகையில் பார்க்கும் போது வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் அளவு 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  எனவே வெயில் காலத்தில் மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன? என்பது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வேலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழு கை ஆடைகள், நூல் துணி பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

  வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரத்தில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரத்தில் அவற்றை திறந்த நிலையிலும் வைத்து வீட்டுக்குள் குழுமை நிலவும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  மின் விசிறி பயன்படுத்தியும், குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட வேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும்.


  இளநீர், நொங்கு, தர்பூசணி, மோர் அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

  வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழ ரசங்கள் ஆகியவை பருக வேண்டும்.

  கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.

  நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.


  அதிக புரதம் அல்லது மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் மூடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம்.

  வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனே நிழலான குளிர்ந்த பகுதியில் படுக்க வைத்து ஈரத்துணியால் துடைத்து, உடல் முழுவதும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யவும்.

  சாதாரண வெப்ப நிலையில் உள்ள தண்ணீரை உச்சந்தலையில் ஊற்றவும். ஆடைகளை தளரச் செய்யவும். குளிர்ந்த நீர், பழச்சாறு, ஓ. ஆர்.எஸ். உப்பு கரைசல் அருந்த கொடுக்கலாம்.

  நினைவு இழந்த நிலையில் இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவும். உடல் சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறி இருந்தால் உடனே டாக்டரிடம் செல்லவும்.

  கோடை வெப்பம் தொடர்பான சேவைக்கு பொதுமக்கள் 1077, 104 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×