search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை பெற்றதாக மருமகள் கூறியதில் சந்தேகம்: போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் புகார்
    X

    குழந்தை பெற்றதாக மருமகள் கூறியதில் சந்தேகம்: போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் புகார்

    குழந்தை பெற்றதாக மருமகள் கூறியதில் சந்தேகம் இருப்பதாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் சோமன் (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவர் மகன் யோகேஷ்குமார் (29). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு பத்மினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    திருமணம் நடந்து 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக பத்மினி தெரிவித்தார். பத்மினியின் கர்ப்பத்தில் அவருடைய கணவர் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை.

    இந்நிலையில் சமீபத்தில் பத்மினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பத்மினி பெற்றது இல்லை என அவரின் கணவர் வீட்டார் கூறினர். மேலும் இது குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    பத்மினி வைத்திருக்கும் குழந்தை யாரிடமாவது வாங்கி இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். கர்ப்பம் தரித்ததாக கூறிய பத்மினி, சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அங்குள்ள டாக்டரிடம் விசாரித்தபோது பத்மினி கர்ப்பம் தரிக்கவில்லை என்றும், அவரது கர்ப்ப பையில் உள்ள கட்டிக்குத்தான் சிகிச்சை அளித்தேன் என்றும் தெரிவித்தார்.

    எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றுக்கொண்டு பத்மினி வீட்டுக்கு வந்துவிட்டார். அந்த குழந்தையை பார்த்தால் 3 மாத குழந்தைபோல் உள்ளது. தொப்புள் கொடி அறுக்கப்பட்ட தடயம் இல்லை. குழந்தைக்கு புட்டிப்பால் தான் கொடுக்கிறார். தாய்ப்பால் கொடுப்பது போல நாடகமாடுகிறார்.

    இதுபற்றி கேட்டால் குழந்தையோடு தற்கொலை செய்வேன் என்று மிரட்டுகிறார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் விசாரித்தபோது பத்மினி அங்கு குழந்தை பெற்றுக்கொள்ள சேரவில்லை என்று தெரிவித்தனர். இதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். அவர் வைத்துள்ளது யாருடைய குழந்தை? என கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியும்படி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பர்வேஸ்குமார் உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் சிவபாஸ்கர் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். குழந்தையின் உண்மைத்தன்மையை கண்டறிய குழந்தைகள் உதவி மையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

    Next Story
    ×