search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்னிமடை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம்
    X

    பன்னிமடை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம்

    பன்னிமடை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் அறுவடைக்கு தயராக இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்தன.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை, தடாகம், கணுவாய், இடிகரை, நரசிம்ம நாயக்கன் பாளையம், புதுப்பாளையம், பூச்சியூர், மணியகாரன்பாளையம், தெற்குப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் இல்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டனர்.

    பன்னிமடை ஊராட்சியில் தாமுநாயூடு தோட்டத்தில் மட்டும் பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேருடன் அடி யோடு சாய்ந்தது. சில வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது. இதனை கண்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, பன்னிமடை, கணுவாய் பகுதிகளில் சேதமடைந்த வாழை மரங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும், மேலும் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் இது போன்ற மழையை நாங்கள் பார்த்துள்ளோம். எங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் நாசம் ஆகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    பன்னிமடை ஊராட்சி செல்வ விநாயகர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு அரசு சார்பாக 30 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அவைகள் கடந்த 5 ஆண்டுகளுக்கே மேலாக ஒவ்வொரு வீட்டின் கூரையும் உடைந்து சேதமடைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பன்னிமடைபகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் அதே பகுதியை குமார் என்பவரது தொகுப்பு வீட்டின் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
    Next Story
    ×