search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலி
    X

    சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலி

    சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் சென்ற விசைப்படகு ஆழ்கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் விசைப்படகில் இருந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இவர்களில் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த நேவில், கோவளத்தைச் சேர்ந்த சுகந்தன், கேசவன்புத்தன் துறையைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் கேரள மாநில மீனவர் ஒருவர் என 4 பேர் ஒரு விசைப்படகில் கடந்த 19-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலைவீசி காத்திருந்தனர். அப்போது கடலில் சூறைக்காற்று வீசியது. ராட்சத அலைகளும் எழுந்தன. இதனால் மீனவர்கள் விசைப்படகை கடலிலேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினர்.

    இருந்தும் விசைப்படகு சூறாவளி காற்றில் சிக்கி தள்ளாடியது. இதில் விசைப்படகில் இருந்த நேவில் கடலுக்குள் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற உடன் இருந்த மீனவர்கள் முயற்சி செய்தனர். இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்தார். இதற்கிடையே கடலில் எழுந்த ராட்சத அலையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மற்ற 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்களில் குமரி மீனவர்கள் ஜார்ஜ், சுகந்தன் ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர். கேரள மீனவர் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.



    அவரை அந்த வழியாக வேறு விசைப்படகுகளில் வந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி கடலோர காவல்படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    கடலோர காவல் படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சுகந்தன் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. மற்றவர்களின் உடல்களை கடலோர காவல் படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.

    குமரி மீனவர்கள் பலியான தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அவர்கள் கதறி அழுதனர். இறந்து போன மீனவர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    Next Story
    ×