search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  மாரடைப்பு ஏற்படுவதை அறியும் கருவியை கண்டுபிடித்து ஓசூர் மாணவர் சாதனை
  X

  மாரடைப்பு ஏற்படுவதை அறியும் கருவியை கண்டுபிடித்து ஓசூர் மாணவர் சாதனை

  ஓசூரை சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவர் மாரடைப்பு ஏற்படுவதை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
  ஓசூர்:

  ஜனாதிபதியின் ‘‘இன்னொ வே‌ஷன் ஸ்காலர்ஸ் இன் ரெசிடென்ட்ஸ் புரோக்ராம்’’ என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8 கண்டுபிடிப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், குடியரசு தலைவரால் விருது வழங்கி, கவுரவிக்கப்படுகிறார்கள். தேசிய அளவில் நன்மை தருகிற, புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே இந்த திட்டத்தில் இடம்பெற முடியும்.

  அந்த வகையில், மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடிக்க, கருவியை கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவர் ஆகாஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சிப்காட் வளாகத்தில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் மனோஜ்-சவுமி தம்பதியரின் மகன் ஆகாஷ். இவர், ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மனோஜ் தொழிலதிபர் ஆவார்.

  இந்த நிலையில், மாணவர் ஆகாஷ், மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் வகையில், கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை பயன்படுத்தி மாரடைப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார் ஆகாஷ்.

  தனது கண்டுபிடிப்பு குறித்து ஆகாஷ், நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

  ‘‘நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கருவியை கண்டுபிடித்தேன். எனது தாத்தா பிரபாகரன் நன்றாக இருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு வந்து இறந்து போனார். அவரது மரணம் என்னை வெகுவாக பாதித்தது. திடீர்னு வந்து ஆளையே கொல்லும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்கை கண்டுபிடிக்கனும் என்கிற உந்துதல், தாத்தாவின் மரணத்தினால்தான் ஏற்பட்டது.

  நான் கண்டுபிடித்துள்ள இந்த கருவி மூலம் 6 மணி நேரத்திற்கு முன்பே, மாரடைப்பு வருவதை அறிந்து கொள்ள முடியும். இக்கருவி தோலில் ஒட்டக்கூடியதாகும். இதனை கை மணிக்கட்டில் பொருத்திக்கொள்ளலாம். இதிலிருந்து சின்னதாக ஒரு பாசிட்டிவ் மின்சார தூண்டுதல் வெளியாகும்.


  இது இதயத்திலிருந்து மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கையாக வெளியாகும் நெகட்டிவ் புரோட்டீனை ஈர்க்கும், இதன் மூலமாக எப்.ஏ.பி.பி.3 புரோட்டீனின் அளவு அதிகமாக இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதை புரிந்து கொள்ளலாம்.

  இந்த கருவியை தற்போது டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சோதனைக்காக வழங்கியுள்ளேன். அடுத்த(2018) ஆண்டு இறுதியில் இந்த கருவி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ.900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனது கண்டுபிடிப்பு கருவிக்கான காப்புரிமைக்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளேன்.

  மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் தனி கவனம் செலுத்தி, எனக்காக ஒரு குழுவை அமைத்து ஒரு ஆண்டுக்குள் காப்புரிமை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். ஜப்பானில் உள்ள ‘‘டோக்கியோ யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ்’’ பல்கலைகழகமும் எனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  எனது கண்டுபிடிப்பை பாராட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 15-ந்தேதி டெல்லியில் நடந்த விழாவில், எனக்கு ‘‘ராஷ்டிரபதி நவபிரக்தன் புரஸ்கார்’’ என்ற விருதினை வழங்கினார். மேலும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் என்னை வெகுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

  உயிரியல் தொழில் நுட்பத்துறையுடன் கூட்டு சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். மேலும் என் திட்டத்தை, தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக அரசே ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அப்போதுதான், எனது கண்டுபிடிப்பு கருவி சந்தையில், வெறும் 900 ரூபாய்க்கு கிடைக்கும். பொதுமக்களுக்கும் பயன் தரும்.

  இவ்வாறு ஆகாஷ் நிருபர்களிடம் கூறினார்.

  பேட்டியின்போது, ஆகாஷின் தந்தை மனோஜ் உடனிருந்தார்.
  Next Story
  ×