search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வருகிற 1-ந் தேதி முதல் கல்லணையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
    திருவாரூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வருகிற 1-ந் தேதி முதல் கல்லணையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

    திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    கூட்டத்தில் காவிரி டெல்டாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் விவசாயிகள் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ள வேண்டும். கடந்த 25 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு காவிரி இறுதி தீர்ப்பை பெற்றோம். ஆனால் மத்திய அரசு இந்த உரிமையை அபகரிக்கின்ற வகையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பிற்கு தடையாக மத்திய அரசு உள்ளது

    எனவே காவிரியின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும். வறட்சி காரணமாக விவசாயிகள் பெற்ற அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 2015-16 ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 1-ந் தேதி முதல் தஞ்சை மாவட்டம் கல்லணையில் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×