search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே ஜல்லி எந்திரம் மீது மின்சார ரெயில் மோதியது
    X

    திருவள்ளூர் அருகே ஜல்லி எந்திரம் மீது மின்சார ரெயில் மோதியது

    திருவள்ளூர் அருகே நள்ளிரவில் ஜல்லி எந்திரம் மீது மின்சார ரெயில் மோதியது. இதையடுத்து அந்த மின்சார ரெயில் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    திருவள்ளூர்:

    சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில், ரெயில் பாதையில் ஜல்லியை சீராக நிரப்பும் பணிக்காகக பயன்படுத்தப்பட்ட எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அதில் நீண்டு கொண்டிருந்த பெரிய இரும்பு கம்பி மீது திடீரென மின்சார ரெயிலின் என்ஜின் மோதியது.

    இதில் ரெயில் பெட்டியில் இருந்த பேட்டரி சேதம் அடைந்தது. அதிலிருந்த வயர்கள் அறுந்து ஆயில் வெளியே கொட்டியது. இதனால் ரெயிலை மீண்டும் இயக்க முடியாத நிலை உருவானது. ரெயில் மோதியதில் ஜல்லி எந்திரமும் பலத்த சேதம் அடைந்தது.

    இது குறித்து திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து பேட்டரியை சரிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதையடுத்து அந்த மின்சார ரெயில் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விடிய விடிய தவித்தபடி ரெயிலிலேயே தூங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை மற்றொரு பக்க என்ஜின் மூலம் சேதம் அடைந்த மின்சார ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதில் இருந்த பயணிகள் காலை 3.15 மணி அளவில் வேறொரு மின்சார ரெயிலில் சென்றனர்.

    விபத்து ஏற்பட்டது நள்ளிரவு நேரம் என்பதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்படவில்லை. பெரிய அளவில் ரெயில் என்ஜின் சேதம் அடையாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    தண்டவாளத்தில் ஜல்லியை சீராக நிரப்பும் எந்திரத்தை சரிவர நிறுத்தாமல் சென்ற ஊழியர்கள் யார்? என்று ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×