search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயிற்றை கட்டாமல் இருக்க அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்- தலையங்கம்
    X

    வயிற்றை கட்டாமல் இருக்க அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்- தலையங்கம்

    மக்கள் வயிற்றை கட்டாமல் இருக்க அரிசி விலையை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமாகும்.
    சென்னை:

    எண்சாண் உடலுக்கு ஒரு சாண் வயிறே பிரதானம் என்பார்கள். உண்மையும் அது தான். அந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் நாம் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.

    இதை தவிர சேர்க்கும் அத்தனையும் பூமிக்கே சொந்தம். சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து யோசித்தால் இது புரியும். எது இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் வயிற்றுக்கு சோறு இல்லாவிட்டால்...!

    எத்தனை உணவு வகைகள் இருந்தாலும் தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் அரிசி சோறுக்குத்தான் முக்கியத்துவம்.

    தினசரி அரிசி உணவைத்தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால்தான் எத்தனையோ தானியங்கள் பயிரிட்டாலும் நெல்லுக்குத்தான் மவுசு. நெல்விளைச்சல் பாதித்தால் மாநிலமே ஸ்தம்பிக்கும்.

    அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் திண்டாடுவார்கள். அது வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாகி விடும்.

    பொதுவாக கஷ்டப்படும் போது கை கொடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் யார் கஷ்டப்பட்டாலும் சரி, நஷ்டப்பட்டாலும் சரி, வாய்ப்பு கிடைக்கும் போது நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்ற மன நிலைதான் அதிகம்.

    அதனால் தான் எந்த பொருள் தட்டுப்பாடு உருவானாலும் உடனே பதுக்கலும் அதிகரிக்கிறது. விலையும் உயருகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்துப்போனது. இதன் காரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி வறண்டு நெல்விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது.

    அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் வட மாநிலங்களில் இருந்து நெல் கொண்டு வரப்படுகிறது. இதை காரணம் காட்டி அரிசி விலையை உயர்த்தி வருகிறார்கள்.

    மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது ஐ. ஆர்.50, ஐ.ஆர். 20, ரூபாலி பொன்னி, அதிசய பொன்னி, டீலக்ஸ் பொன்னி, வெள்ளை பொன்னி, பாபட்லா போன்ற ரகங்கள்தான்.

    இந்த ரக அரிசிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களில் கிலோவுக்கு ரூ. 10 வரை அதிகரித்துள்ளது.

    பொன்னி, பாபட்லா போன்ற ரகங்கள்தான் அதிகமாக வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் அனைத்து ரக அரிசி விலையையும் உயர்த்தி இருக்கிறார்கள்.

    பதுக்கலும் அதிகரித்துள்ளது. செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதன் மூலம் விலை உயர்வுக்கு வழி வகுக்கிறார்கள்.

    சிலரது பண பசிக்காக சாதாரண மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடுவது சரியா?

    இக்கட்டான நேரங்களில் தான் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும். லாபத்தை குறைத்து, பதுக்கலை தவிர்த்து மக்களுக்கு உதவலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடப்பதல்ல. ஏறி வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த பதுக்கலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மலிவு விலையில் எந்த பொருள் வழங்காவிட்டாலும் மக்கள் அவதிப்பட மாட்டார்கள். அரிசி மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் கட்டுப்படியான விலையில் கிடைக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறார்கள்.

    எனவே வெளிமார்கெட்டில் அரிசிவிலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை தேவை. வெளிமாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் அரசு கூட ஈடுபடலாம்.

    கோடை காலம் முடிந்து அடுத்த போகம் விளைந்தால் தான் அரிசி விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். எனவே இன்னும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இந்த தருணத்தில் தற்காலிகமாக அரிசி ஆலைகளில் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த லாபத்தில் மக்களுக்கு விநியோகிக்கலாம். அரசு நினைத்தால் நடக்காதது இல்லை. மக்கள் வயிற்றை கட்டாமல் இருக்க அரிசி விலையை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
    Next Story
    ×