search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்: பா.வளர்மதி - நயினார்நாகேந்திரன்
    X

    அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்: பா.வளர்மதி - நயினார்நாகேந்திரன்

    அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் உல்லாசமாக, சுதந்திரமாக போய்க்கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர்களான பா.வளர்மதி மற்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா தன்னை முதல்-அமைச்சராக பதவி ஏற்க அழைப்பு விடுக்கும் படி கவர்னரை சந்தித்து நேற்று கடிதம் கொடுத்தார்.

    அதனை தொடர்ந்து ஆட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்டு சசிகலாவை சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் போயஸ் கார்டனில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ. பன்னீர்செல்வத்தை தாக்கி கையெழுத்து வாங்கியதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அது தவறான தகவல். அதை முற்றிலும் மறுக்கிறேன். ஓ. பன்னீர்செல்வம் 3-வது முறையாக முதல்- அமைச்சராக இருப்பவர். அவருக்கு எல்லாமே தெரியும். அவர் முழுமனதுடன் தான் கையெழுத்திட்டார்.

    பொதுச்செயலாளர் சசிகலாவிடம் நீங்கள் முதல்வராக வேண்டும். அதற்கு எனது முழு ஆதரவை தருகிறேன் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் அனைத்து எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த உண்மை தெரியாமல் தமிழிசை தவறான தகவலை கொடுத்திருக்கிறார்.

    அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை பிணை கைதிகளாக வைத்திருக்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள். அப்படி கூறுவது மிகப்பெரிய தவறு. அப்படியென்றால் அவர்கள் நக்சலைட்டுகளா? தீவிரவாதிகளா? ஏன் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். எம்.எல்.ஏக்கள் உல்லாசமாக, சுதந்திரமாக போய்க்கொண்டிருக்கிறார்கள்.

    யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று அவர்களின் மனைவி, மகன், மகள்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்களா? யாரோ ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு இப்போது மிரட்டல் வருகிறது. காவல்துறையினரும் மிரட்டுகிறார்கள். அதனால் தான் அவர்களின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    சசிகலாவை முழுமையாக ஆதரித்த ஓ. பன்னீர் செல்வத்தின் பின்னால் தி.மு.க உள்ளது. திட்டமிட்டு தி.மு.க சதிவேலை செய்கிறது. சசிகலா முதல்வராக வரக்கூடாது என்பதற்காக தொடர் திட்ட சதிவேலையில் ஈடுபடுகிறார்கள். முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவார்கள் என்று கூறுகிறார்.

    இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் போது இது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார். ஆனால் சட்டசபையில் துரைமுருகன் பேசும் போது ஓ. பன்னீர் செல்வத்துக்கு தி.மு.க ஆதரவாக இருக்கும் என்றார். அப்போது அவரது அருகில் இருந்த மு.க.ஸ்டாலின் இதனை மறுக்கவில்லை. திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கும்போதும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்போம் என்றே தெரிவித்தார்

    அதனால் இந்த சதி திட்டத்தில் தி.மு.க பின்னணியில் இருப்பது. உறுதியாக தெரிகிறது.

    அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து கூறும் போது கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். நேற்று முன்தினம் இரவு வரை அவர் சசிகலா தலைமை ஏற்க வரவேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொண்டார். ஒரே நாள் இரவுக்குள் கழகம் மாறிவிட்டது எப்படி என்று தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தலைமை கழகம் ஒரு கோவில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் ஒரு கோவில், அ.தி.மு.க தொண்டர்கள் மனதில் இருக்கும் இந்த கோவில்களை தூக்கி எறிந்து விட்டு தங்களை காத்துக்கொள்வதற்காக ஓ. பன்னீர்செல்வத்திடம் போய்விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-



    ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த செயல்பாடு பின்னணியில் தி.மு.க உள்ளது. தி.மு.க வையும் கருணாநிதியையும் தீயசக்தி என்று எம்.ஜி.ஆர் கூறினார். இந்த தீய சக்திகளை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று புரட்சித்தலைவி கூறினார். ஆனால் அதற்கு மாறாக ஓ. பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. ஓ. பன்னீர்செல்வத்திடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதற்கு அவர் ஒன்றும் குழந்தையல்ல.

    ஜனநாயக முறைப்படி சசிகலாவை பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும். கவர்னர் நல்ல முடிவை எடுப்பார். தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பார். ஓ. பன்னீர் செல்வம் கட்சிக்கு துரோகம் செய்து விட்டார்.

    அவரை எம்.ஜி.ஆர் சாதாரண நகர செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக பல்வேறு பதவிகளுக்கு கொண்டு வந்தார். முதல்வராக ஆக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. சசிகலா முதல்வராக வேண்டும் என்று அவரது காலில் விழுந்து ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். யார் துரோகம் செய்தார்கள் என்று காலம் பதில் சொல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் தன்னை முதல்வராக பதவி ஏற்க அழைக்கும்படி கவர்னருக்கு சசிகலா கடிதம் கொடுத்திருக்கிறார். அதனை ஏற்று இன்று மாலைக்குள் அழைப்பு வரும் என்று எதிர் பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×